தமிழக தேர்தல் பற்றி மத்திய உள்துறையுடன் ஆணையம் ஆலோசனை

புதுடெல்லி: தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இன்னும் மூன்று மாதங்களே உள்ளதால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் மாநிலத்தில் தேர்தல் நடத்த இருக்கும் நிலவரம் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் கடந்த மாதம் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தமிழகம் வந்து தீவிர ஆய்வுகளை மேற்கொண்டனர். இதில் மாநில தேர்தல் அதிகாரி, தலைமைச் செயலர், டிஜிபி, மாவட்ட தேர்தல் அலுவலர்களான ஆட்சியர்கள், மாவட்ட எஸ்பிக்கள், வருமான வரித்துறை அலுவலர்கள் ஆகியோர் அனைவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து மேற்கண்ட அதிகாரிகள் புதுவையிலும் ஆலோசனை நடத்தினார்கள்.

இந்த நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகள் மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லாவிடம் நேற்று தீவிர ஆலோசனை நடத்தியுள்ளனர். அதில், ‘‘தமிழகம், புதுவை ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலை நடத்தும்போது இருக்கும் பாதுகாப்பை நடைமுறைப்படுத்துவது, அதற்கான செயல்பாடுகளை எவ்வாறு செய்ய வேண்டும், எத்தனை கட்டங்களாக தேர்தலை நடத்தலாம், அதன் விதிமுறைகள் என்னென்ன, மேலும் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக எப்போது துணை ராணுவத்தினரை மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கலாம், அதற்கான எண்ணிக்கை எவ்வளவாக இருக்க வேண்டும். அவர்களது பயண விவரங்கள் ஆகியவை குறித்து ஆலோசித்துள்ளனர். இதேப்போன்று விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கும் அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் குறித்தும் ஆலோசித்துள்ளனர்.

Related Stories: