அமைச்சர் பதவியில் இருக்கும் ஈஸ்வரப்பா யாருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்: எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கேள்வி

பெங்களூரு: அதிகாரத்தில் இருக்கும் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா யாருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார் என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பினார். ரெய்ச்சூர் மாவட்டம் தேவதுர்கா தாலுகா வீரகோடவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் சித்தராமையா பேசியதாவது: குருபர் சமூகத்தினருக்கு எஸ்,டி. இடஒதுக்கீடு வழங்குவதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் தற்போதைய இடஒதுக்கீடு போராட்டத்தில் அரசியல் உள்ளது. இதற்கு பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உள்ளது. இந்த காரணத்துக்காக நான் எதிர்ப்பு தெரிவிக்கிறேன். அதே போல் மத்திய, மாநிலத்தில் பா.ஜ. அரசு அமைந்துள்ளது. அரசுகளுக்கு நெருக்கடி கொடுத்து இடஒதுக்கீடு பெற முடியும். ஆனால் பதவியில் உள்ள அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா யாருக்கு எதிராக தற்ேபாது போராட்டம் நடத்தி வருகிறார் என்று புரியவில்லை.

நான் முதல்வராக இருந்த நேரத்தில் நான்கு மாவட்டங்களில் குருபர் சமூகத்தினருக்கு எஸ்.டி. இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. குருபர் சமூகத்தை உடைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. ஆனால் அது முடியாது.  குருபர் சமூக தலைவராக தற்போது கே.எஸ்.ஈஸ்வரப்பா முயற்சித்து வருகிறார். நான் அதிகாரத்தில் இருந்தாலும், இல்லை என்றாலும் சமூக நீதி பக்கம் இருப்பேன்.  ஹூப்பள்ளியில் அகிந்தா மாநாடு நடத்திய போது முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா வேண்டாம் என்று தெரிவித்தார். அதேபோல், அமைச்சர் பதவி பறிக்கப்படும் என்று எச்சரித்தார். ஆனால் மக்களுக்காக அகிந்தா மாநாடு நடத்தப்பட்டது. இதற்காக நான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டேன். அப்படியிருந்தும் கடைசி வரை சுயமரியாதையுடன் வாழ்ந்து வருகிறேன். எதுவரை மக்கள் பாதுகாப்பு இருக்கிறதோ அதுவரை யாரும் என்னை எதுவும் செய்ய முடியாது. ராஜ்குமார் தெரிவித்தது போல் நீங்களே என்னுடைய கடவுள் என்றார்.

Related Stories: