வாஷிங்டன்: ‘அதிபர் பதவியிலிருந்து டிரம்ப்பை நீக்க துணை அதிபர் 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கெடு விதித்துள்ளார். அமெரிக்காவில் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடெனின் வெற்றியை ஏற்றுக் கொள்ளாத டிரம்ப் ஆதரவாளர்கள், கடந்த 7ம் தேதியன்று நாடாளுமன்றத்தை சூழ்ந்து போராட்டம் நடத்தினர். பெரும் அதிர்ச்சியை உண்டாக்கிய இந்த சம்பவம் குறித்து உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன. அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகரான நான்சி பெலோசி, அதிபர் பதவியிலிருந்து டிரம்ப்பை நீக்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறி உள்ளார். அமெரிக்காவின் அரசிய லமைப்புபடி, சட்டத்திருத்தம் 25-ஐப் பயன்படுத்தி துணை அதிபரால் அதிபரை பதவியிலிருந்து நீக்க முடியும். எனவே, இதற்கான நடவடிக்கையை துணை அதிபர் மைக் பென்ஸ் மேற்கொள்ள வேண்டும் என்றும் அழுத்தம் தரப்படுகிறது.