வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாமல் பிடிவாதமாக உள்ள மத்திய அரசால் நாடு உணவுப் பஞ்சத்தை எதிர் நோக்கியுள்ளது!: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாமல் மத்திய அரசு பிடிவாதமாக இருப்பதால் நாடு உணவுப் பஞ்சத்தை எதிர் கொண்டுள்ளதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் 47வது நீடித்து வருகின்றது. மத்திய அரசுடன் தொடர்ச்சியாக நடந்த பலகட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வி அடைந்துவிட்டன. தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்களும் வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் மத்திய அரசு அதனை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் மேற்குவங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உரையாற்றிய செல்வி  மம்தா பானர்ஜி, மத்திய அரசு மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார்.

விவசாயிகளின் நலனுக்கு எதிராக எதையும் செய்யக்கூடாது என தெரிவித்த அவர்,  புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்காமல் மத்திய அரசு பிடிவாதமாக இருப்பதால் நாடு உணவுப் பஞ்சத்தை எதிர் நோக்கி உள்ளதாகவும் தெரிவித்தார். மற்ற கட்சிகளில் உள்ள அழுகிய தலைவர்களை கட்சியில் இணைத்துக்கொண்டு பாஜக ஒரு குப்பை கட்சியாக மாறியுள்ளதாகவும், மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சனம் செய்தார். பாஜக தேர்தலில் தோல்வியுறும் நாளன்று அமெரிக்காவில் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் நடந்துக் கொண்டதை போன்றே பாஜக தொண்டர்களும் நடந்துக் கொள்வார்கள் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Related Stories: