உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என கம்பத்தில் களைகட்டும் கழுதைப்பால் சேல்ஸ்-ஒரு சங்கு ரூ.30க்கு விற்பனை

கம்பம் : உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என, கம்பத்தில் கழுதைப்பால் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

திருச்சியைச் சேர்ந்த சிலர் கம்பத்தில் முகாமிட்டு, கழுதைகளை தெரு, தெருவாக அழைத்துச் சென்று பால் கறந்து விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘திருச்சியிலிருந்து கழுதைகளுடன் இங்கு முகாமிட்டுள்ளோம்.

நான்கு குழுவாக பிரித்து கம்பத்தில் தெரு, தெருவாக கழுதைகளை ஓட்டிச்சென்று பாலை கறந்து ஒரு சங்கு ரூ.30க்கு விற்கிறோம். பெரியவர்களின் மூச்சுதிணறல், குழந்தைகளின் ஜீரண சக்தி, நோய் எதிர்ப்பு சக்தி, மஞ்சள் காமாலை, சளி கோளாறு ஆகியவற்றுக்கு கழுதைப்பால் அருமருந்தாகும்.

ஒரு கழுதையிடம் இருந்து தினசரி 200 முதல் 300 மில்லி வரை பால் கறக்கலாம். இதன் மூலம் சுமார் ரூ.500 வருமானம் கிடைக்கிறது. பொதுமக்கள் இருக்கும் இடத்திற்கே நேரடியாகச் சென்று பாலை கறந்து கொடுப்பதால் பொதுமக்கள் நம்பிக்கையுடன் வாங்குகின்றனர்’ என்றனர்.

இது குறித்து சித்த மருத்துவர் சிராஜூதீனிடம் கேட்டபோது, ‘கழுதைப்பாலுக்கு அதிக மருத்துவக் குணங்கள் உண்டு. இயற்கையிலேயே அதிக இனிப்புச்சுவை கொண்டது. தென் தமிழகத்தில் தொடக்க காலத்தில் பிறந்த குழந்தைகளுக்க மூன்று நாள் கழுதைப்பால் கொடுப்பர். தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக குழந்தைக்கு கொடுக்க தரமான பால். பிறந்த குழுந்தைகளுக்கு வரும் கருவாப்பு நோய்க்கு சிறந்த மருந்து என சித்த மருத்துவ புத்தகத்தில் ஆதாரத்துடன் உள்ளது.

தாய்பாலில் உள்ள லாக்டோசின் அளவு கழுதைப்பாலில் அளவு குறையாமல் உள்ளது. பசும்பாலில் உள்ள புரோட்டீன் கூட சில குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். ஆனால், அலர்ஜி இல்லாத பால் கழுதைப்பால். பெரியவர்களுக்கு தோல்நோய், சித்தபிரமை என்னும் மனோவியாதிக்கும் சிறந்தது. ஆனால், சுத்தமான கழுதைப்பாலாக இருக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: