பிரதமர் மோடி, அமித்ஷா பெயரை கேட்டாலே தமிழக ஆட்சியாளர்கள் அஞ்சி நடுங்குகின்றனர் : ப.சிதம்பரம் பாய்ச்சல்

புதுக்கோட்டை : பிரதமர் மோடிக்கு அஞ்சி நடுங்கும் தமிழக ஆட்சியாளர்கள் அகற்றப்பட வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் பெயரை கேட்டாலே தமிழக ஆட்சியாளர்கள் அஞ்சி நடுங்குவதாக கூறியுள்ளார். எந்த பயணும் இல்லை என்பதால் இவர்களை மக்கள் அகற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் போட்டிப் போட்டுக் கொண்டு நாளிதழ்களில் விளம்பரம் கொடுப்பதாக கூறியுள்ள ப. சிதம்பரம், இவர்களை நிறைவேற்றிய திட்டங்களை  பட்டியலிட்டு மாவட்ட வாரியாக இருவரின் இணையதளத்தில் வெளியிட தயாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். முதலமைச்சர், துணை முதலமைச்சர் இடையே போட்டி உருவாகி உள்ளதாகவும் அந்த போட்டி 27ம் தேதி நடைபெற உள்ள ஒரு சம்பவத்தை அடுத்து மேலும் தீவிரமடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட பல துறைகளை கையில் வைத்துள்ள மத்திய அரசு, உண்மை குற்றவாளிகளை தப்பவிட்டு அரசியல் எதிரிகளை பழி வாங்க பயன்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசை எதிர்க்கும் துணிச்சல் அதிமுக அரசுக்கு இல்லை என்று ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதனால் நீட் தேர்வு, 2 வேளாண் சட்டங்கள் ஆகியவற்றை தமிழக ஆட்சியாளர்கள் ஆதரித்ததாக அவர் குற்றம் சாட்டி இருக்கிறார்.

Related Stories: