அரியானாவில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக முதல்வரின் நிகழ்ச்சி நடக்க இருந்த இடத்தை சூறையாடிய விவசாயிகள்: போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி கலைத்தனர்

சண்டிகர்: வேளாண் சட்டங்களை ஆதரித்து, அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் பங்கேற்க இருந்த கூட்ட அரங்கை விவசாயிகள் சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில், பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் 47 நாட்களாக தொடர்ந்து நேற்றும் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், வேளாண் சட்டங்களை ஆதரித்து ‘கிஷான் மகாபஞ்சாயத்’ என்ற நிகழ்ச்சி, அரியானா பாஜ முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் சண்டிகரின் கர்னல் மாவட்டம் கைம்லா கிராமத்தில் நேற்று நடந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்தை நடத்த விடமாட்டோம் என ஏற்கனவே விவசாயிகள் எச்சரித்திருந்தனர். இதனால் விழா நடக்கும் இடத்திற்கு விவசாயிகள் வருவதை தடுக்க பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டன. கடும் நெருக்கடிக்கு இடையே, நேற்று காலை விழாவுக்கான ஏற்பாடுகள் முழுமையாக செய்து முடிக்கப்பட்டது. பெரிய திடலில் மேடை அமைத்து, இருக்கைகள் அமைக்கப்பட்டன. முதல்வரின் ஹெலிகாப்டர் தரையிறங்க ஹெலிபேடும் அமைக்கப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை அம்மாநில பாஜ தலைவர் ஓம் பிரகாஷ் தன்கர், அமைச்சர் கன்வார் பால் குஜ்ஜார், உள்ளூர் பாஜ எம்எல்ஏ சந்தீப் சிங் ஆகியோர் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது ஏராளமான விவசாயிகள் கருப்பு கொடியுடன், நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் குவிந்து, மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். அங்கு போடப்பட்டிருந்த இருக்கைகள், விழா மேடையில் இருந்த பேனர்களை கிழித்தெறிந்தனர். இதனால் அவசர அவசரமாக பாஜ நிர்வாகிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். பின்னர், கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், தடி அடியும் நடத்தினர். இதனால் அந்த இடமே போர்க்களமாக மாறியது. அங்கு அமைக்கப்பட்ட ஹெலிபேடையும் விவசாயிகள் சேதப்படுத்தினர். இந்த சம்பவத்தால், முதல்வரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்த சம்பவம், வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் எவ்வளவு கோபத்துடன் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் ஓர் உதாரணமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.

* பிரியாணி சாப்பிடும் விவசாயிகள்: பாஜ சர்ச்சை

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், மகிழ்ச்சியாக பிரியாணி சாப்பிடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. இதை கண்ட பாஜ.வின் மூத்த தலைவரும், ராஜஸ்தான் மாநில எம்எல்ஏவுமான மதன் திலவார் கடுமையாக விமர்சித்துள்ளார். ‘‘போராட்டம் என்ற பெயரில் சுற்றுலாத் தலம் போல் ஒன்றுகூடி மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். அங்கே இருப்பவர்கள் உண்மையான விவசாயிகள் அல்ல. அடிக்கடி தங்கள் தோற்றத்தை மாற்றுகிறார்கள். பலர் அங்கே ஆடம்பரமான டிரை ப்ரூட்ஸ் சாப்பிடுவதைப் பார்த்தேன். இன்னும் பலர் சிக்கன் பிரியாணி சாப்பிடுகிறார்கள். இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வராவிட்டால் டெல்லியில் பறவைக்காய்ச்சல் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிவிடும்,’’ என்று அவர் கூறியுள்ளார். அவருக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Related Stories: