நிர்வாக சீர்திருத்த ஆணைய தலைவர் பொறுப்பு அச்சுதானந்தன் பதவி விலக முடிவு: அரசு இல்லத்தை காலி செய்தார்

திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், நிர்வாக சீர்திருத்த ஆணைய தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், கடந்த தேர்தலில் மலம்புழா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் மீண்டும் முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு பதிலாக மார்க்சிஸ்ட் மேலிடம் பினராய் விஜயனை முதல்வராக அறிவித்தது. அச்சுதானந்தனுக்கு கேபினட் அந்தஸ்துடன் கூடிய நிர்வாக சீர்திருத்த ஆணைய தலைவர் பதவி வழங்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் அவருக்கு அரசு இல்லமும் வழங்கப்பட்டது.

அதில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில், இந்த ஆணையம் சார்பில் இதுவரை அரசுக்கு 5 அறிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் ஒரு பரிந்துரையை கூட அரசு நிறைவேற்றவில்லை. அதே நேரம், கடந்த  ஓராண்டாக அச்சுதானந்தன் முதுமை காரணமாக தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். தற்போது அவர், நிர்வாக சீர்திருத்த ஆணைய தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். முதல் கட்டமாக, நேற்று முன்தினம் அவர் அரசு இல்லத்தை காலி செய்து விட்டு, திருவனந்தபுரத்தில் உள்ள மகன் அருண் குமார் வீட்டுக்கு சென்று விட்டார்.

* பனிப்போர் காரணமா?

அச்சுதானந்தனுக்கும், முதல்வர் பினராய் விஜயனுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே கட்சிக்குள் கடும் பனிப்போர் நிலவி வருகிறது. இதன் காரணமாக, நிர்வாக சீர்திருத்த ஆணைய தலைவர் என்ற முறையில் அச்சுதானந்தன் வழங்கிய பரிந்துரைகளை பினராய் ஏற்கவில்லை என தெரிகிறது.

Related Stories: