டாலர் கடத்தல் வழக்கில் தொடர்பு; கேரள சபாநாயகரிடம் விசாரிக்க தீவிர முயற்சி: சட்ட நிபுணருடன் சுங்க இலாகா ஆலோசனை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்திய சொப்னா தலைமையிலான கும்பல், இந்தியாவில் முறைகேடாக சம்பாதிக்கும் பணத்தை டாலர்களாக மாற்றி வெளிநாட்டுக்கு கடத்தியதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த டாலர் கடத்தலில் கேரள சபாநாயகர் ராமகிருஷ்ணனுக்கும் தொடர்பு உள்ளதாக கருதப்படுகிறது. இதுபற்றி சபாநாயகர் ராமகிருஷ்ணனின் உதவி தனிச்செயலாளர் ஐயப்பனிடம் விசாரணை நடத்த சுங்க இலாகா முடிவு செய்து, 3 முறை அவரது அலுவலகத்தில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனால், சட்டசபை கூட்டத் தொடரால் விசாரணைக்கு ஆஜராக முடியாது என ஐயப்பன் கூறினார்.

இந்நிலையில், ஐயப்பன் நேற்று கொச்சியில் உள்ள சுங்க இலாகா அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் காலை 10 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 7 வரை 9 மணி நேரம் தொடர்ந்தது. இதில் பல்ேவறு தகவல்கள் சுங்க இலாகாவுக்கு கிடைத்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, சபாநாயகர் ராமகிருஷ்ணனிடமும் விசாரணை நடத்த சுங்க இலாகா தீர்மானித்துள்ளது. ஆனால், இதில் சட்ட சிக்கல்கள் ஏற்படலாம் என தெரிகிறது. எனவே, அது பற்றி உதவி சொலிசிட்டர் ஜெனரல் விஜயகுமாரை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தித்து சட்ட ஆலோசனை பெற்றனர். அவரது ஆலோசனைப்படி சபாநாயகரிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.

Related Stories: