சிட்னி டெஸ்டில் ஆஸி. கை ஓங்கியது இந்திய அணிக்கு கடும் நெருக்கடி: ஜடேஜா, பன்ட் காயம்

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 244 ரன்னுக்கு சுருண்டது. ஆஸி. அணி 2வது இன்னிங்சில் 2விக்கெட் இழப்புக்கு 103 ரன் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 338 ரன் குவித்து ஆல் அவுட்டானது. புகோவ்ஸ்கி 62, லாபுஷேன் 91, ஸ்மித் 131 ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய இந்தியா 2ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 96 ரன் எடுத்திருந்தது. புஜாரா 9, கேப்டன் ரகானே 5 ரன்னுடன் நேற்று 3வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். ரகானே 28 ரன் எடுத்து கம்மின்ஸ் வேகத்தில் கிளீன் போல்டானார்.

அடுத்து வந்த விஹாரி 4 ரன் மட்டுமே எடுத்து ரன் அவுட்டானார். புஜாரா - ரிஷப் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 53 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தது. பன்ட் 36 ரன், புஜாரா 50 ரன் (176 பந்து, 5 பவுண்டரி) எடுத்து பெவிலியன் திரும்பினர். ஒரு முனையில் ஜடேஜா உறுதியுடன் போராட... அஷ்வின் 10 ரன், சைனி 3, பூம்ரா 0, சிராஜ் 6 ரன்னில் அணிவகுத்தனர். இந்தியா முதல் இன்னிங்சில் 244 ரன்னுக்கு (100.4 ஓவர்) ஆல் அவுட்டானது. ஜடேஜா 28 ரன்னுடன் (37 பந்து, 5 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா 49 ரன்னுக்கு கடைசி 6 விக்கெட்டை பறிகொடுத்தது குறிப்பிடத்த். விஹாரி, அஷ்வின், பூம்ரா ஆகியோர் ரன் அவுட் ஆனதும் இந்தியாவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

ஆஸி. தரப்பில் கம்மின்ஸ் 4, ஹேசல்வுட் 2, ஸ்டார்க் ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து, 94 ரன் முன்னிலையுடன் ஆஸி. 2வது இன்னிங்சை தொடங்கியது. பேட்டிங் செய்யும்போது இடது  முழங்கையில் காயம் ஏற்பட்டதால் ரிஷப் களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக விருத்திமான் சாஹாா  விக்கெட் கீப்பர் பணியை செய்தார். அதேபோல் இடது கை பெருவிரலில் அடிபட்டதால் ஜடேஜாவும் களமிறங்கவில்லை. அவருக்கு பதில் அகர்வால் பீல்டிங் செய்தார். ஆஸி. தொடக்க வீரர்கள் புகோவ்ஸ்கி 10 ரன், வார்னர் 13 ரன் எடுத்து வெளியேற, இந்திய வீரர்கள் உற்சாகமடைந்தனர். எனினும்,  லாபுஷேன் - ஸ்மித்  ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தது.

இவர்களை பிரிக்க இந்திய பவுலர்கள் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. 3ம் நாள் ஆட்ட முடிவில் ஆஸி. 2 விக்கெட் இழப்புக்கு 103 ரன் எடுத்துள்ளது. லாபுஷேன் 47, ஸ்மித் 29 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 8 விக்கெட் இருக்க, ஆஸி. 197 ரன் முன்னிலை பெற்றுள்ளதால், இந்திய அணி கடும் நெருக்கடியுடன் இன்று 4வது நாள் சவாலை எதிர்கொள்கிறது.

Related Stories: