மருத்துவ படிப்பில் மாணவர்களுக்கு இடம் கிடைத்ததால் ‘டாப் இன்ஜி.,’ கல்லூரிகளில் 276 இடங்கள் வீணானது: இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்த கோரிக்கை

சென்னை: மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் 276 மாணவர்களுக்கு இடம் கிடைத்ததால் முன்னணி இன்ஜினியரிங் கல்லூரிகளில், அந்த இடங்கள் வீணானது. இதையடுத்து மருத்துவப்படிப்பபை போல் ெபாறியியலுக்கும் இரண்டாவது கட்ட கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் முன்னணி இன்ஜினியரிங் கல்லூரிகளான கிண்டி, அண்ணா பல்கலைக்கழகம் (சிஇஜி), குரோம்பேட்டை, மெட்ராஸ் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி உள்ளிட்ட கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்பில் நடப்பாண்டில் சேர்ந்த மாணவர்களில் 276 மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு மருத்துவம் மற்றும் இதர பிரிவில் படிப்பதற்காக சேர்ந்து விட்டனர்.

மருத்துவ மாணவர் சேர்க்கை போன்று பொறியியல் பிரிவுக்கு 2ம் கட்ட கலந்தாய்வு இல்லை என்பதால் இந்த இடங்கள் காலியாகவே இருக்கும். முன்னதாக நிபுணர்கள் நேர்முக கவுன்சலிங்கை ஒப்பிடுகையில் ஆன்லைன் கவுன்சலிங்கின் போது அதிக இடங்கள் காலியாகி விட்டதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அண்ணா பல்கலை பேராசிரியர்கள் கூறியதாவது: பிஇ, பிடெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை காலக்கெடுவாக ஆகஸ்டு 15ம் தேதியினை உச்சநீதிமன்றம் நிர்ணயித்தது. திடீரென கொரோனா தொற்று பரவ துவங்கியது. இதனால் மாணவர் சேர்க்கை தேதியை ஆகஸ்டு 31ம் தேதி வரை நீடித்தது.

எனவே முதன்மையான கல்லூரிகளில் காலியிடங்களை குறைக்க, முதலில் மருத்துவ கவுன்சலிங்கை நடத்த வேண்டும். ஐஐடி மற்றும் என்ஐடிகளில் கவுன்சலிங் நடத்தப்பட்டபோது பொறியியல்  கலந்தாய்வை நடத்தாமல் அரசு காலம் தாழ்த்தியது. எனவே, மருத்துவ கவுன்சலிங்  முடிந்த பிறகு, காலியாக உள்ள இன்ஜினியரிங் இடங்களை நிரப்புவதற்கு 2ம் கட்ட  கவுன்சலிங் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். மேலும் இதுகுறித்து தொழில் ஆலோசகர்கள் கூறுகையில், ‘இது இடங்களை வீணடிக்கும் செயல். ஏராளமானோர் அண்ணா பல்கலையில் படிக்க முடியாததால், சுயநிதி கல்லூரிகளில் படிக்க பெரும் பணத்தை செலவிடுகிறார்கள்’ என்றனர்.

Related Stories: