பொங்கல் கொண்டாட அரசு கொடுத்த 2,500 ‘அம்பேல்’ டாஸ்மாக்கில் களைகட்டிய மது விற்பனை: சராசரி விற்பனை 115 கோடியாக உயர்வு

சென்னை: பொங்கல் கொண்டாட அரசு கொடுத்த பரிசு தொகை 2,500 ரூபாயால், டாஸ்மாக் கடைகளில் இந்த ஆண்டு சராசரி மதுவிற்பனை அமோகமாக நடந்துள்ளது. 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகை வரும் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு ஒவ்வொரு வருடமும் 1,000 பொங்கல் பரிசாக அரசு வழங்கி வந்தது. ஆனால், இந்த ஆண்டு அது 2,500 ஆக உயர்த்தப்பட்டது. அதன்படி, கடந்த 4ம் தேதி முதல் தமிழகத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசு வழங்கி வரும் 2,500 பொங்கல் பரிசுத்தொகை மீண்டும் டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கே வந்துவிடும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது வைரலானது. அவர் கூறியது போன்றே, பொங்கல் தொகுப்பு பரிசு பணம் விநியோகத்திற்கு பிறகு டாஸ்மாக் கடைகளில் நடைபெறும் சராசரி மதுவிற்பனையானது தற்போது 115 கோடியாக உயர்ந்துள்ளது.

சாதாரண நாட்களில் 80 முதல் 90 கோடி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை நடைபெறும். ஆனால், கடந்த 4ம் தேதிக்கு பிறகு மதுவிற்பனையானது அதிகரித்துள்ளது. அரசு வழங்கிய 2,500 மீண்டும் டாஸ்மாக் கடைகளுக்கு சென்றதே இந்த மதுவிற்பனை அதிகரிப்பிற்கு காரணம் என டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, 5 மற்றும் 6ம் தேதிகளில் மட்டும் 228.46 கோடிக்கு மதுவிற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.  வரும் நாட்களில் இந்த மதுவிற்பனை அதிகரிக்கும் எனவும் டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல், பொங்கல் பண்டிகைக்கு தேவையான மதுவகைகளை கூடுதலாக இருப்பு வைக்கவும் மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால், பொங்கல் பண்டிகைக்கு 300 கோடி வரையில் மதுவிற்பனை நடைபெற வாய்ப்புள்ளதாகவும் டாஸ்மாக் தகவல் தெரிவித்துள்ளது.

ஜனவரி 5ம் தேதி மண்டலம்    விற்பனை(கோடிகளில்)

சென்னை    24.84

திருச்சி    23.92

மதுரை    22.80

சேலம்    21.65

கோவை    20.19

ஜனவரி 6ம் தேதி மண்டலம்    விற்பனை (கோடிகளில்)

சென்னை    25.36

திருச்சி    23.34

மதுரை    22.84

சேலம்    22.17

கோவை    21.32

Related Stories: