கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய நாளை தமிழகம் வருகிறார் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்..!!

டெல்லி: கொரோனா தடுப்பு மருந்துகள் செலுத்தும் ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நாளை தமிழகம் வரவுள்ளார். இந்தியாவில் ஜனவரி 13ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக தடுப்பூசியை பெறும் மாநிலங்களில் தமிழகமும் இடம்பிடிக்கும் என கூறப்படுகிறது. ஆந்திரா, குஜராத், பஞ்சாப் மற்றும் அசாம் மாநிலங்களில் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான ஒத்திகை நடத்தப்பட்டது. நாளை அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு மருந்து ஒத்திகை நடைபெறுகிறது. தடுப்பூசி கிடைத்தவுடன் அதனை மக்களுக்கு செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தமிழகத்தில் தயார் நிலையில் உள்ளன. இதனை பார்வையிட்டு ஆய்வு செய்ய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நாளை தமிழகம் வரவுள்ளார்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொள்கிறார். தொடர்ந்து சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள மத்திய மருந்து கிடங்கை ஹர்ஷ்வர்தன் பார்வையிடுகிறார். இந்த மருந்து கிடங்கில் இருந்து தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் லட்சத்தீவு, அந்தமான் தீவுகளுக்கு தடுப்பு மருந்து அனுப்பப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் முதுகெலும்பாக மருத்துவர்கள் உள்ளனர் என்றும் கொரோனா தொற்று தடுப்பூசிகளை விநியோகிக்க பெரிய செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருவதாக முன்னதாக ஹர்ஷ்வர்தன் குறிப்பிட்டிருந்தார்.

Related Stories: