ஜோ பைடனுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வன்முறையில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வு

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வன்முறை, துப்பாக்கிச்சூட்டில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. ஒரு பெண் துப்பாக்கிச்சூட்டில் இறந்த நிலையில் 3 பேர் தள்ளுமுள்ளுவில் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜனவரி 20-க்குள் பதவி நீக்கப்படலாம் என அவரது ஆதரவாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற வன்முறை காரணமாக ட்ரம்ப் ஆதரவாளர்கள் பலர் பதவி விலக முடிவெடுத்தள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க நாடாளுமன்றம் கூடியது. இதற்கான இரு அவையின் கூட்டுக் கூட்டத்தில், தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் தலைமையில், ஜோ பைடனை அதிபராக அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. நாடாளுமன்றம், அதிபர் மாளிகையிலிருந்து சுமார் 2 மைல் தொலைவில் அமைந்துள்ளது. அப்போது அங்கு திரண்ட ஆயிரக்கணக்கான ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள், அமெரிக்கா. அமெரிக்கா என முழக்கமிட்டபடி, அங்கு ஏற்படுத்தப்பட்டிருந்த தடுப்புகளை கீழே தள்ளிவிட்டும் உடைத்துக் கொண்டும் நாடாளுமன்றத்துக்குள் புகுந்தனர்.

என்னை மிதிக்க வேண்டாம் என்ற வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட கொடிகளையும் கைகளில் ஏந்தியபடி வந்திருந்த அவர்கள், ஜோ பைடனை அமெரிக்க அதிபராக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு எதிராக குரல் எழுப்பினர். அப்போது அவர்களுக்கும் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்ததால், அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதனால் ஜோ பைடனை அதிபராக அறிவிக்கும் நிகழ்வு நிறுத்தப்பட்டு, துணை அதிபர் மைக் பென்ஸ் உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதர உறுப்பினர்களும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். அதன் பின்னர் அப்பகுதியில் பைப் வெடிகுண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது. அச்சமயம் பல முறை துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கூறியுள்ளனர்.

இதையடுத்து, முற்றுகையிட்டவர்களை வெளியேற்ற காவல்துறையினர் துப்பாக்கிச்சுடு நடத்தினர். இ்தில் ஒரு பெண் மீது குண்டு பாய்ந்தது. படுகாயமடைந்த அந்தப்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன்பின்னர் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு நாடாளுமன்றத்தின் நுழைவுவாயில்கள் அனைத்தும் மூடப்பட்டு, பூட்டப்பட்டது.

அப்போது ஏற்பட்ட மோதலில் காவல்துறையினர் சிலரும் காயமடைந்தனர். நிலைமை மோசமானதால், அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் வழிகாட்டுதலின் பேரில், தேசிய காவலர் மற்றும் பாதுகாப்புப் படையினர் வாஷிங்டனுக்கு விரைந்துள்ளதாக வெள்ளை மாளிகையில் பத்திரிகை செயலாளர் கெய்லி மெக்னன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தை டொனால்டு ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால் ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து தலைநகர் வாஷிங்டனில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: