வேலூரில் தொடரும் வேட்டை உள்ளாட்சி நிதி தணிக்கை துறை உதவி இயக்குநர் ஆபீசில் ரெய்டு: 1.04 லட்சம்; பரிசுப்பொருள் பறிமுதல்

வேலூர்: வேலூரில் உள்ளாட்சி நிதித்தணிக்கை துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 1.04 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.  வேலூர் அண்ணா சாலையில் உள்ள ஏலகிரி அரங்கில் உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குநர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு கிராம ஊராட்சி, பிடிஓ அலுவலகம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் வரவு, செலவுகளை ஆண்டுக்கு ஒரு முறை அல்லது புகாரின் பேரில் தணிக்கை செய்வது வழக்கம். இந்த நிலையில், பேரூராட்சி அலுவலக அதிகாரிகளிடம், இருந்து நிதி தணிக்கை உதவி இயக்குநர் அலுவலகத்தில் புத்தாண்டு பரிசு பொருட்கள் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று மாலை அந்த அலுவலகத்தை போலீசார் கண்காணிக்க தொடங்கினர்.  பின்னர், அலுவலகத்திற்குள் வாகனங்கள் சென்றதை தொடர்ந்து, வேலூர் மாவட்ட விஜிலென்ஸ் டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையில் போலீசார் திடீரென நுழைந்து சோதனை நடத்தினர்.

அப்போது, உதவி இயக்குநர் அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையிலும் துருவித்துருவி சோதனை நடத்தினர். அங்கு புத்தாண்டு பரிசாக வாங்கிய பணம், ஸ்வீட், டைரி, பழங்கள், சால்வைகள் உள்ளிட்டவை சிக்கியது. போலீசார் வருவதை பார்த்த அதிகாரிகள் சிலர், பணத்தை டேபிள், மேஜை, ஆவணங்களுக்கு இடையில் செருகி வைத்தனர். அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.  அந்த வகையில் கணக்கில் வராத 1.04 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சோதனை 3 மணி நேரத்திற்கு மேலாக நடந்தது. பரிசு பொருட்களை தொடர்ந்து கணக்கெடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக உதவி இயக்குநர் பரந்தாமன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: