உச்ச நீதிமன்றம் கவலை விவசாயிகள் விவகாரத்தில் தீர்வு காணாதது வேதனை

புதுடெல்லி: ‘விவசாயிகளின்போராட்டம் தொடர்பாக எந்த முடிவும் எட்டப்படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது’ என உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லி எல்லையில் பல்வேறு மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், டெல்லி எல்லையில் போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்வதற்கு இடையூறாக இருக்கும் போராட்டக்காரர்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த நீதிமன்றம், வன்முறை இல்லாமல் போராட்டம் நடத்தலாம் என கடந்த மாதம் 17ம் தேதி உத்தரவிட்டதோடு, பிரதான வழக்கை ஜனவரியில் விசாரிப்பதாக தெரிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி, ‘‘விவசாயிகள் விகாரத்தில் தற்போது வரை எந்த முடிவும் எட்டப்பாடமல் இருப்பது கவலையாக அளிக்கிறது. இருப்பினும் அவர்களின் வேதனைகளை எங்களால் புரிந்துக்கொள்ள முடிகிறது’’ என தெரிவித்தார். மத்திய அரசின்  கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா ஆஜராகி, “அரசு தரப்பில் விவசாய அமைப்புகளுடன் பேச்சு வாரத்தை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்த அனைத்து விவரங்களும் அடங்கிய அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம்’’ என தெரிவித்தார். இதையடுத்து வழக்கை வரும் 11ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி

வைத்தனர்.

இன்று டிராக்டர் பேரணி

டெல்லி எல்லையில் 42 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர். நேற்று நடக்க இருந்த இப்பேரணி மோசமான வானிலையால் இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதில், டெல்லியின் சிங்கு, திக்ரி, காஜியாபாத் மற்றும் ஷாஜகான்பூர் ஆகிய 4 எல்லையிலும் குண்ட்லி-மானேசர்-பல்வால் விரைவுசாலையில் நடக்கிறது.

Related Stories: