டெல்லியில் 4 நாளாக நீடிக்கும் கனமழை

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் நேற்று தொடர்ந்து நான்காவது நாளாக இடியுடன்  கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் வீடுகளின் கூரை, ஜன்னல்களை பதம்பார்த்தது. இதுபற்றி இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது: டெல்லியில் நேற்று காலை சுமார் 7.30 மணியளவில் தெற்கு டெல்லி பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. இருண்ட மேகங்கள் திரண்டு பார்வை தெரிவுநிலையைக் குறைத்தன. மேலும் கனமழைகொட்டித் தீர்த்ததால் பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்தை பாதிப்படைய செய்தது. பஞ்சவதி சிவப்பு விளக்கு பகுதியில மழைநீர் தேங்கியதால் ஆசாத்பூரிலிருந்து முகர்பா சவுக் நோக்கி செல்லும் சரக்கு வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த பாதையை  பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டுமென டெல்லி போக்குவரத்து போலீசார் ட்விட்டர் மூலம் வாகன ஓட்டிகளை எச்சரிக்கை செய்து கேட்டுக்கொண்டனர். அதோடு, நேற்று மேலும் கனமழை மற்றும் ஆலங்கட்டி மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்  எச்சரிக்கை செய்யப்பட்டது.

ஆலங்கட்டி மழை பெய்ததை குருகிராம் நகரை ஒட்டிய பகுதிகளை சேர்ந்த பலரும் வீடியோவாக எடுத்து அவற்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். நகரத்திற்கான பிரதிநிதித்துவ தரவுகளை வழங்கும் சப்தர்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் நேற்று முன்தினம் காலை 8:30 மணி முதல் புதன்கிழமை காலை 8:30 மணி வரை 6 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவித்தது. அதேபோன்று, பாலம், லோதி சாலை, ரிட்ஜ் மற்றும் அயாநகரில் உள்ள வானிலை நிலையங்கள் முறையே 4.2 மிமீ மற்றும் 10.4 மிமீ, 5.1 மிமீ மற்றும் 8.4 மிமீ மழை பதிவாகின. சப்தர்ஜங்கில், குறைந்தபட்ச வெப்பநிலை 13 டிகிரி செல்சியஸ் பதிவானது. இது இயல்பை விட ஆறு புள்ளிகள் அதிகம். அடுத்த இரண்டு நாட்களில் டெல்லியில் அடர்த்தியான மூடுபனி ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது.

Related Stories: