டெல்லியில் குற்றங்கள் அதிகரிப்பு விசாரணைகளை விரைந்து முடிக்க தடயவியல் வல்லுநர்கள் நியமனம்: போலீசின் அபார திட்டம்

புதுடெல்லி: சைபர் மற்றும் நிதி மோசடி க்ரைம்களில் துல்லியமான விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டறியும் பணிக்கு, தடயவியல் திறனாளிகளை டெல்லி போலீசார் அமர்த்த உள்ளனர். தொழில்நுட்ப வளர்ச்சி அசுர வேகம் அடைந்து வரும் நிலையில், அதற்கு நிகராக சைபர் க்ரைம் மற்றும் நிதி மோசடி சார்ந்த பொருளாதார குற்றங்களும் அதிகரிக்கின்றன. நிதி மோசடி மற்றும் வங்கி மோசடி சார்ந்த பொருளாதார குற்றங்களில் விசாரணை நடத்துவது போலீசுக்கு மிகவும் சிக்கலான விஷயம். அதாவது ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஆவணங்களை துல்லியமாக போலீசார் படித்தறிந்து, மோசடிக்கான ஆதாரங்களை கண்டறிய வேண்டும். காவல் துறையில் பணிக்கு வருபவர்களிடம் அனைத்து விஷயங்களையும் எளிதில் ஊகித்து விடக்கூடிய பொது அறிவு இருக்கும் என கணிக்கவும் முடியாது. இதனால், பல வழக்குகளில் விசாரணை மாத மற்றும் ஆண்டுக் கணக்கில் தாமதம் ஏற்படுகிறது.

எனவே தடயவியல் திறமைசாலிகளை ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு அமர்த்தி, விசாரணைகளை விரைவாக முடிக்க திட்டமிட்டு உள்ளோம். தற்போது கணக்கிட்டு உள்ளபடி தடயவியல் துறை திறமைசாலிகளாக 119 பேரை ஓராண்டு பணி அடிப்படையில் நியமனம் செய்ய உள்ளோம். தடயவியல் படிப்பில் பொது, டிஜிட்டல், கணக்கியல், உளவியல், ரசாயனம், உயிரியியல், இயற்பியல் என அனைத்து பிரிவுகளில் இருந்தும் திறமையான ஆட்களை தேர்வு செய்து விசாரணைக்கு பயன்படுத்த உள்ளோம். இதற்காக காந்திநகரில் உள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்துடன் ஏற்கனவே ஒரு குழு ஆலோசித்து வருகிறது. மாநில காவல்துறைக்காக ஓராண்டு ஒப்பந்தத்தில் தொழில்முறை நிபுணர்களை நியமிக்க அந்த குழு உதவி செய்யும். இது தொடர்பாக இந்த மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

Related Stories: