பாலக்காடு அருகே கூண்டில் சிக்கிய அட்டகாச சிறுத்தை பரம்பிக்குளம் வனத்தில் விடுவிப்பு

பாலக்காடு: பாலக்காடு அருகே ஊருக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய் ஆகியவற்றை கொன்று அட்டகாசம் செய்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காடு தாலுகா அருக மலையோர கிராமங்களான பொதுவப்பாடம், மேக்களப்பாறை, கண்டமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டத்தால் மக்களை பீதி அடைந்துள்ளனர். பட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகள், தொழுவில் கட்டப்பட்டிருந்த கன்றுகுட்டி, மாடு, நாய்களை சிறுத்தை வேட்டையாடி வந்தது. ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, மன்னார்க்காடு வனத்துறையினர் கடந்த டிச.30ம் தேதி கூண்டு வைத்து சிறுத்தை பிடிப்பதற்கான ஏற்பாடு செய்தனர். இந்நிலையில், நேற்று வனத்துறையினர் வைத்த கூண்டில் அட்டகாசம் செய்து வந்த 3 வயது சிறுத்தை சிக்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்க்காடு ரேஞ்சர் ஆஷிக்அலி, திருவிழாம்குன்று துணை ரேஞ்சர் சசிகுமார், செக்‌ஷன் வனத்துறை அதிகாரிகளான ஜெயகிருஷ்ணன், மோகனகிருஷ்ணன், பீட் பாரஸ்ட் அதிகாரிகளான ராஜேஷ்குமார், ராஜீவ் ஆகியோர் தலைமையில் வனக்காவலர்கள் மற்றும் ஊர்மக்கள் உதவியுடன் சிறுத்தை பிடித்து திருச்சூர் வனத்துறை கால்நடை மருத்துவர் டாக்டர். டேவிட் இப்ராஹம் தலைமையில் மருத்துவ பரிசோதனை செய்தனர். அதன்பின், அந்த சிறுத்தை பரம்பிக்குளம் வனத்தில் விடப்பட்டது.

Related Stories: