கடையம் பகுதியில் கண்ணாமூச்சி காட்டிய மழை சிறுகிழங்கு விளைச்சல் குறைந்தது-‘செலவழித்த காசு கரை சேரல’ விவசாயிகள் கவலை

கடையம் : கடையம் பகுதியில் பருவமழை சரிவர பெய்யாததால் சிறுகிழங்கு விளைச்சல் குறைந்தது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

 கடையம் வட்டாரத்தில் ராமநதி, கடனாநதி அணைகள் மூலம் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இப்பகுதிகளில் கடந்த தென்மேற்கு பருவமழையின் போது கார் பருவத்தையொட்டி நெல் சாகுபடி செய்யப்பட்டது. கேரளத்திலும், தென்மாவட்டங்களிலும் சிறுகிழங்கிற்கு நல்ல வரவேற்பு இருப்பதால் கடையம் வட்டாரத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் அதிகளவு நிலங்களில் சிறுகிழங்கு பயிரிடப்படுகிறது.

ஜூன், ஜூலை மாதங்களில் விதைக்கப்பட்டு டிசம்பர் மாதத்தில் அறுவடை செய்யப்படும் சிறுகிழங்குகள் பொங்கல் வரை டிமாண்ட்டாக விற்கப்படும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாமல் கண்ணாமூச்சி காட்டியது. இதனால் தற்போது சிறுகிழங்கு அறுவடை துவங்கியுள்ள நிலையில் விளைச்சல் குறைந்து காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் வேரில் கிழங்கு வைக்காததால் அதை அப்படியே வயலில் போட்டு உழுது விட்டனர்.

இதுகுறித்து மந்தியூரை சேர்ந்த சாகுபடியாளர் முருகன் கூறுகையில், ‘ஒரு ஏக்கரில் சிறுகிழங்கு பயிரிட்டிருந்தேன். ஏக்கருக்கு சிறுகிழங்கு நாற்று நட்டு 6 மாதம் பராமரிப்பு செய்வதற்கு ரூ.35 ஆயிரம் வரை செலவாகிறது. இதுதவிர கிழங்கை அறுவடை செய்வதற்கான கூலி ரூ.10 ஆயிரம் ஆகிறது. தற்போது அறுவடை செய்யப்பட்ட கிழங்குகள் மூன்று ரகங்களாக விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பெரிய கிழங்கு ரூ.30 முதல் 40 வரையிலும், நடுத்தர கிழங்கு ரூ. 12 முதல் 20 வரையிலும், சிறிய கிழங்கு ரூ. 8 முதல் 10 வரையிலும் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

பருவமழை சரியாக பெய்யாததால் அதிக அளவில் வேர்களுடனும், முடிச்சுகளுடனும் காணப்படுகிறது. ஆனால், கிழங்கு சரியாக விளையவில்லை. எனவே, கடையம் வட்டாரத்தில் உரிய முறையில் மண் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தோட்டக்கலைத் துறையினர் இப்பகுதி நிலத்திற்கேற்ற விளைச்சலை பெற விவசாயிகளுக்கு வழிகாட்ட வேண்டும். இதில் செலவு செய்த முதலீடு கூட கிடைக்காதது வேதனை தருகிறது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

சிறுகிழங்கு, உருளைக்கிழங்கு வகையைச் சார்ந்தது. இதை “சைனிஸ் பொட்டட்டோ” என்றும் அழைக்கின்றனர். கேரளத்தில் இதனைக் கூர்க்கன் கிழங்கு என்று அழைக்கின்றனர். சத்து மிகுந்த இக்கிழங்கு 6 மாத காலப்பயிர். இதில் நம் உடலுக்குத் தேவையான தினப்படி கால்சியம், வைட்டமின் ஏ (பீட்டா கரோடின்) இரண்டும் கிடைக்கும். அதிகமான இரும்புச் சத்தும் கொண்டது. உருளைக் கிழங்கில் அதன் எடையில் 5 சதம் மட்டுமே புரதம் உள்ளது, சிறு கிழங்கில் 5 முதல் 13 சதம் புரதம் உள்ளது. எனவே இயற்கையில் விளைவித்த சிறு கிழங்கு மிக ஆரோக்கியமானது. நிலக்கடலை வளரும் நிலங்களில் சிறுகிழங்கும் ந‌ன்றாக வளரும். நன்றாகப் பராமரித்தால் ஒரு ஏக்கரில் 4000 முதல் 5000 கிலோ விளைச்சல் எடுக்கலாம்.

அணைகள் தூர்வாரப்படுமா?

கடந்த சில ஆண்டுகளாக பருவமழை காலம் தவறி பெய்து வருவதால் குறித்த காலத்தில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. தண்ணீரை சேமித்து வைத்து விவசாயம் செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் அணைகள் கட்டப்பட்டன. ஆனால் ராமநதி, கடனா நதி அணைகள் முறையாகக் தூர்வாரபடாததால் தண்ணீரை சேமித்து வைக்க முடிவதில்லை. இதனால் அணை கட்டியதற்கான நோக்கமே பயனற்று போகிறது. அணைகளை முறையாகதூர்வாரினால் கூடுதல் தண்ணீர் சேமிக்கபட்டு விவசாயம் செழிக்க வாய்ப்புள்ளது. எனவே, ராமநதி, கடனா நதி அணைகளை போர்க்கால அடிப்படையில் தூர்வார தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Related Stories: