பொங்கல் பரிசு வாங்க மூதாட்டியை தள்ளுவண்டியில் படுக்க வைத்து தள்ளி சென்ற சிறுவர்கள்-கொத்தமங்கலத்தில் நெகிழ்ச்சி சம்பவம்

புதுக்கோட்டை : கொத்தமங்கலம் மேற்கு கிராமத்தில் பொங்கல் பரிசு வாங்க சென்ற மூதாட்டியை தள்ளுவண்டியில் படுக்க வைத்து சிறுவர்கள் தள்ளி சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முதல் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவரங்குளம் ஒன்றியம் கொத்தமங்கலம் மேற்கு கிராமத்தை சேர்ந்தவர் சுப்புலட்சுமி (70). தனியாக வசித்து வரும் இவருக்கு அவ்வப்போது அவருடைய மகள் உதவி செய்து வருகிறார்.

இந்நிலையில் பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் ரூ.2,500 வாங்குவதற்காக வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரேஷன் கடைக்கு நேற்று நடந்து சென்றார். நீண்ட நேரம் நடந்ததில் சோர்வடைந்த மூதாட்டி, இடையில் சாலையோரத்தில் உள்ள மரத்தடியில் படுத்துவிட்டார். இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த நிதின் (9), இவரது தம்பி ஆகியோர் தங்களது வீட்டில் உள்ள தள்ளுவண்டியில் மூதாட்டி சுப்புலட்சுமியை ஏற்றி படுக்க வைத்து ரேஷன் கடைக்கு தள்ளி சென்றனர்.

இதேபோன்று பொருட்களை வாங்கி கொண்டு மீண்டும் அவரது வீட்டுக்கு அழைத்து சென்று இறக்கி விட்டனர். சிறுவர்களின் செயலை ரேஷன் கடையில் கூடியிருந்த மக்கள் பாராட்டினர்.

Related Stories: