சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய 38 தொகுதிகளின் பாஜ வேட்பாளர் பட்டியல்? அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தொகுதி பறிபோகும் நிலை; குழப்பத்தை ஏற்படுத்த உளவுத்துறை வெளியிட்டது என குற்றச்சாட்டு

சென்னை: பாஜ சார்பில் போட்டியிடும் 38 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று காலை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அதிமுக அமைச்சர்கள் மற்றும் அதிமுக எம்எல்ஏக்களாக உள்ளவர்களின் தொகுதிகளும் இருந்தது. ஆளுங்கட்சியில் குழப்பத்ைத ஏற்படுத்த இது போன்ற தகவல்களை உளவுத்துறை மூலமாக பரப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பாஜ சார்பில் 38 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்ற பட்டியல் நேற்று காலை வாட்ஸ் அப், பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த 38 வேட்பாளர் பட்டியலை தமிழக பாஜ தயாரித்து டெல்லி மேலிடத்துக்கு அனுப்பி வைத்ததாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தகவலை பாஜ தலைவர்கள் மறுத்துள்ளனர். எத்தனை தொகுதிகள், வேட்பாளர் யார் என்பதை டெல்லி மேலிடம் தான் முடிவு செய்யும். தமிழக பாஜவால் முடிவு செய்ய முடியாது. அப்படியிருக்கும் போது இந்த தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் கூட்டணியே முடிவாகவில்லை. ஒரு குழப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தும் வகையில் இது போன்ற தகவல்களை பரப்பி விட்டுள்ளனர். இந்த பட்டியல் போலியானது என்று தமிழக பாஜவினர் தெரிவித்தனர்.

அந்த பட்டியலில் அமைச்சர் சரோஜாவின் ராசிபுரம் தொகுதி, அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் திருச்சி கிழக்கு தொகுதி, அமைச்சர் பாஸ்கரனின் சிவகங்கை தொகுதியும் இடம் பெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் தி.நகர் தொகுதியில் தற்போதைய எம்எல்ஏவாகவும், மாவட்ட செயலாளராகவும் தி.நகர் சத்யா உள்ளார். அந்த தொகுதியும் இதில் இடம் பெற்றுள்ளது. அதே போல மைலாப்பூரில் நடராஜ், சாத்தூரில் ராஜவர்மன், பரமக்குடி சதன் பிரபாகர், பூம்புகார், கோவை தெற்கு, சேலம் மேற்கு, திருப்பூர் வடக்கு, மொடக்குறிச்சி என்று தற்போது அதிமுகவில் எம்எல்ஏக்களாக உள்ளவர்களின் தொகுதிகளும் இடம் பெற்றுள்ளது. அந்த தொகுதிகளில் ஏற்கனவே உள்ளவர்கள் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.

இந்த நேரத்தில் அதிமுக தரப்பில் இருந்து உளவுத்துறை மூலமாக இந்த பட்டியல் வெளியிடப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வெளியான 38 தொகுதிகள் எவை, வேட்பாளர் யார் என்ற விவரம் வருமாறு: சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி- நடிகை குஷ்பு, தி.நகர்- முன்னாள் பாஜ தலைவர் எச்.ராஜா, கொளத்தூர்- ஊடகத்துறை தலைவர் ஏ.என்.எஸ். பிரசாத், மயிலாப்பூர்- பொது செயலாளர் கருநாகராஜன், துறைமுகம்- பாஜ இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம், வேளச்சேரி- பாஜ மாநில செயலாளர் டால்பின் ஸ்ரீதர், மாதவரம்-சென்னை சிவா, திருவள்ளூர்- லோகநாதன், செங்கல்பட்டு- கே.டி.ராகவன்.

கே.வி.குப்பம்- முன்னாள் மேயர் கார்த்தியாயினி, பென்னாகரம்- வீரப்பன் மகள் வித்யாராணி, திருவண்ணாமலை-தணிகைவேலு, போளூர்- சி.ஏழுமலை, ஓசூர்- நரசிம்மன், சேலம் மேற்கு- சுரேஷ் பாபு, மொடக்குறிச்சி- சிவசுப்பிரமணியன், ராசிபுரம்-வி.பி.துரைசாமி, திருப்பூர் வடக்கு- மலர்க்கொடி, கோவை தெற்கு-வானதி சீனிவாசன், சூலூர்-ஜி.கே.நாகராஜ், திருச்சி கிழக்கு- டாக்டர் சிவசுப்பிரமணியன், பழனி- என்.கனகராஜ், அரவக்குறிச்சி- முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, ஜெயங்கொண்டம்- ஐய்யப்பன், திட்டக்குடி- தடா பெரியசாமி, பூம்புகார்- அகோரம்.

மயிலம்- கலிவரதன், புவனகிரி- இளஞ்செழியன், திருவையாறு-பூண்டி வெங்கடேசன், தஞ்சாவூர்-கருப்பு முருகானந்தம், கந்தவர்கோட்டை- புரட்சி கவிதாசன், சிவகங்கை- சத்யநாதன், பரமக்குடி- பொன்பாலகணபதி, மதுரை கிழக்கு-ராம ஸ்ரீனிவாசன், திருநெல்வேலி- முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், சாத்தூர்- மோகன்ராஜூலு, தூத்துக்குடி- முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா, நாகர்கோவில்- காந்தி ஆகியோர் போட்யிடுவார்கள் என்று அந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: