நாசமா போனாலும் போகுது என தாய்மார்கள் விடுகின்றனர் ‘பொங்கல் பணம் எங்கேயும் போகாது டாஸ்மாக் மூலம் திரும்ப வந்துவிடும்’: அடுத்து ஆரம்பிச்சுட்டாரு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல்: நாசமா போனாலும் போகுது என தாய்மார்கள் விட்டு விடுகின்றனர், பொங்கல் பரிசு பணம், டாஸ்மாக் மூலம் மீண்டும் அரசுக்கே வந்து விடும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பெரியகோட்டை ஊராட்சி கோமையன்பட்டியில் மினி கிளினிக் திறப்பு விழா நேற்று முன்தினம் மாலை நடந்தது. கிளினிக்கை துவக்கி வைத்து விழா மேடையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மேடைக்கு முன்பு நின்றிருந்த ஒருவர், ‘‘பொங்கல் பரிசு ரூ.2,500 பெறுவதற்கான டோக்கன் எனக்கு இதுவரை தரவில்லை’’ என அமைச்சரிடம் தெரிவித்தார்.

அதற்கு திண்டுக்கல் சீனிவாசன் பதிலளித்து பேசுகையில், ‘‘நீ ஒன்று பழகிக்கொள். உங்க ஊருக்கு வந்து நான் மைக்கை பிடித்து பேசும்போது நீ குறுக்கே, குறுக்கே கேள்வி கேட்கிறாய். கீழே இறங்கி வரும்போது என்னிடம் கேட்டிருக்கலாம். நீ தண்ணி போட்டிருக்கிறாய். நான் என்ன பதில் சொல்ல முடியும்? இந்த டாஸ்மாக்கால பெரிய கொடுமையா போச்சு. இவருக்கு கொடுக்கும் பொங்கல் பரிசு பணம் எங்கேயும் போகாது. டாஸ்மாக் மூலம் அந்த பணம் மீண்டும் அரசுக்கே திரும்ப வந்து விடும். அரசு வழங்கும் பணம் அரசுக்கே கிடைத்து விடும்.

வேட்டி, சேலை, கரும்பு, அரிசி, பருப்பு உள்ளிட்டவை தாய்மார்களுக்கு சென்று விடும். அதை பாதி விலைக்கு விற்க முடியாது. அரசு கொடுக்கும் ரூ.2,500 பொங்கல் பரிசு நாசமா போனாலும் போகுது என்று தாய்மார்கள் விட்டு விடுகின்றனர்’’ என்றார். அமைச்சரின் இந்த பேச்சை கேட்டு, கூடியிருந்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். ‘பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை எழும்பி உள்ள நிலையில், பொங்கல் பணம் டாஸ்மாக் மூலம் அரசுக்கே திரும்ப வந்து விடும் என்கிறாரே அமைச்சர்’ என அங்குள்ளவர்கள் முணுமுணுத்தனர்.

* ‘நீட் தேர்வு எழுதாமல் தமிழகத்தில் 316 டாக்டர்’

திண்டுக்கல் நாகல் நகரில் அரசின் பொங்கல் பரிசு வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ‘‘அரசுப்பள்ளிகள், சாதாரண பள்ளிகளில்  படித்த மாணவர்களை, நீட் தேர்வு எழுதாமல் டாக்டர் ஆக்குவேன் எனக்கூறி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் 316 பேரை டாக்டராக்கி உள்ளார்’’ என உளறிக் கொட்டினார். மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற சூழலில், நீட் தேர்வு எழுதாமல் டாக்டர் ஆனதாக அமைச்சர் பேசியதை கேட்டு, கூடியிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் விழாவில் சிறிதுநேரம் சலசலப்பு நிலவியது.

Related Stories: