பெங்களூரு: மஜதவுக்கு வேறு கட்சியுடன் இணைய வேண்டிய அவசியம் வரவில்லை என்று மஜத மாநில இளைஞர் அணி தலைவர் நிகில்குமாரசாமி தெரிவித்தார். பெங்களூருவில் அமைந்துள்ள மஜத தலைமை அலுவலகமான ஜே.பி.பவனில் மஜத இளைஞர், மாணவர் அணியின் மாவட்ட, தாலுகா அளவிலான தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட மாநில இளைஞர் அணி தலைவர் நிகில்குமாரசாமி பேசியதாவது: மாநிலத்தில் மஜத கட்சியை சொந்த பலத்துடன் அதிகாரத்துக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான செயல்வீரர்கள் மஜதவை நம்பியுள்ளனர். அவர்களின் ஆதரவால் கட்சி பலப்படுத்தப்படும். 2021-ம் ஆண்டு மஜத இளைஞர் அணி வருடமாக இருக்கும். தற்போது நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் 30 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர் அணி தலைவர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மஜத கட்சியை வேறு கட்சியுடன் இணைக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அப்படி ஒரு நிலை ஏற்படாது.
