ஐபிஎஸ் அதிகாரியான மகளுக்கு இன்ஸ்பெக்டர் தந்தை சல்யூட்: திருப்பதியில் நெகிழ்ச்சி சம்பவம்

திருமலை: ஐபிஎஸ் படித்து கூடுதல் ஆணையராக பணியாற்றி வரும் தனது மகளுக்கு எழுந்து நின்று இன்ஸ்பெக்டர் சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான சம்பவம் திருப்பதியில் நடந்தது. திருப்பதி கல்யாணி அணை காவல் பயிற்சிப்பள்ளியில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஷியாம்சுந்தர். இவரது மகள் பிரசாந்தி. கடந்த 2018ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்வு பெற்று ஆந்திர மாநிலம் குண்டூர் டவுனில் கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகிறார்.மாநில பிரிவினைக்கு பின்னர் முதன் முறையாக ஆந்திர மாநில காவல் துறையின் முதல் தற்காலிக காவல் பயிற்சி மற்றும் சாகச நிகழ்ச்சி திருப்பதியில் நடைபெற்று வருகிறது. இதில், பங்கேற்க குண்டூர் காவல்துறை கூடுதல் ஆணையர் பிரசாந்தியும், ஷியாம் சுந்தரும் பாதுகாப்பு பணிக்கு வந்தனர்.

தந்தையும், மகளும் ஒரே இடத்தில் பணியாற்றியபோது இருவரும் சந்திக்க நேர்ந்தது. அப்போது இருக்கையில் அமர்ந்திருந்த ஷாம்சுந்தர் எழுந்து நின்று தன்னைக்காட்டிலும் உயர்ந்த பதவியிலிருக்கும் மகளை பார்த்து பெருமையுடன் சல்யூட் அடித்தார். இதைக்கண்ட பிரசாந்தியும் தந்தைக்கு பதில் வணக்கம் செலுத்தினார். அப்போது ஷியாம்சுந்தர் ஆனந்த கண்ணீர் விட்டார். ஷியாம்சுந்தர் கூறுகையில், ‘என் மகளுக்கு நான் சல்யூட் அடித் தது பெருமையாக  இருந்தது’ என்றார்.

Related Stories: