பாகிஸ்தானில் இந்து கோயில் இடிப்பு 100 பேர் கைது: 8 போலீசார் சஸ்பெண்ட்

பெஷாவர்: பாகிஸ்தானில் இந்து கோயில் இடிக்கப்பட்டது தொடர்பாக 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 8 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் கரக் மாவட்டத்திலுள்ள கோயில் ஒன்றை புதுப்பிக்கும் முயற்சியில் இந்துக்கள் ஈடுபட்டிருந்தனர். இதற்கு முறையான அனுமதியினையும் அரசாங்கத்தில் பெற்றிருந்தனர். ஆனால், இதனை விரும்பாத இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கடந்த புதன்கிழமையன்று கோயிலை இடித்தும் தீ வைத்தும் சேதப்படுத்தினர். நூற்றுக்கணக்கானோர் சேர்ந்து கோயிலை இடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இச்சம்பவத்துக்கு இந்தியா உள்பட சர்வதேச நாடுகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இதனால் இடிக்கப்பட்ட கோயிலை விரைவில் புதுப்பித்து தருவதாகவும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாகிஸ்தான் அரசு உத்தரவாதம் தந்திருந்தது. அதனடிப்படையில் கோயில் இடிக்கப்பட்டது தொடர்பாக 350 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 8 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றமும் இன்று அறிக்கை சமர்ப்பிக்குமாறும், சம்பவத்திற்கு காரணமான உள்ளூர் பிரமுகர்களை நாளை ஆஜராகும்படியும் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: