பாரம்பரியத்தை காக்கும் பொருட்டு மார்கழியில் மகத்துவமாக கோலமிடும் திருச்செந்தூர் ஆசிரியை

திருச்செந்தூர்: பாரம்பரியத்தை காக்கும் பொருட்டு திருச்செந்தூர் ஆசிரியை மார்கழி மாதத்தில் ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக கோலமிட்டு அசத்துகிறார். மார்கழி மாதம் மகத்துவமானது. அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்து விட்டு அதே புத்துணர்ச்சியோடு வாசல் தெளித்து கோலமிட்டு அந்த கோலத்தின் மீது அழகாய் பூசணி பூக்களை வைத்து அழகுபடுத்துவார்கள். இந்த கோலத்தை பார்த்தால் அன்னை மகாலட்சுமியே அந்த வீட்டிற்குள் போய் குடியேறுவாள் என்பது ஐதீகம். இந்த மார்கழி மாதத்தில் பூசணி பூவானது அதிகமாகப் பூக்கும் என்பதால் இந்தப் பூவினை நம் முன்னோர்கள் பயன்படுத்தினார்கள்.

கோலம் போடுவதால் மனதுக்கு உற்சாகம், நினைவாற்றல் எல்லாம் கிடைக்கிறது. மனஒருமைப்பாடு இருந்தால் தான் புள்ளிகளைச் சரியாக இணைத்துக் கோலம் போடமுடியும். கோலங்கள் போடாத வீடுகளில் கூட மார்கழி மாதத்தில் கோலமிட்டு நடுவில் பசுஞ்சாண உருண்டையை வைத்து அதில் பூசணி பூவினை வைப்பார்கள். தற்போது செம்பருத்திப்பூக்களையும் அதிகம் வைக்கின்றனர். திருச்செந்தூரைச் சேர்ந்த ஆசிரியர் அங்கையற்கனி என்பவர் இந்த மார்கழி மாதத்தில் புள்ளிக்கோலம், கம்பிக்கோலம், ரங்கோலி, தானியம் வைத்து கோலம் போடுவது, கிரிக்கெட் வீரர் ஹோலி, பிரதமர் மோடி ஆகியோரின் படங்களை கோலமாக வரைந்து அசத்துகிறார்.

இவை தவிர பைசானிக் சாரி, கேரள பாரம்பரிய கதகளி நடனம் ஆகியவற்றையும் நாள்தோறும் வீட்டு முன்பு கோலமாக போடுகிறார். இதுகுறித்து ஆசிரியர் அங்கையற்கனி கூறும்போது, மார்கழி மாதத்தில் தமிழர்கள் பாரம்பரியமாக வீட்டு முன்பு சாணம் தெளித்து பூசணி பூ வைத்து கோலம் போடுவார்கள். தற்போது நவீன காலத்தில் கோலம் போடுவது என்பது அழிந்து வருகிறது என்பதால் நிறைய கோலப்போட்டிகள் நடத்துகிறார்கள். நான் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக மார்கழி மாதத்தில் நாள்தோறும் ஒவ்வொரு விதமாக வீட்டு வாசலில் கோலம் போடுகிறேன்.

இவற்றை தினமும் ஏராளமானோர் பார்த்து செல்கின்றனர். அதிகாலையில் எழுந்து கோலம் போடுவது உடலுக்கு புத்துணர்ச்சி கிடைப்பதோடு, நமது பாரம்பரியமும் காக்கப்படுகிறது என்றார்.

Related Stories: