வேலூர் விமான நிலையத்தில் ஓடுதளம்- டெர்மினல் கட்டிடத்தை இணைக்கும் ரன்வே பணிகள் தொடக்கம்

வேலூர்: வேலூர் விமான நிலையத்தில் ஓடுதளம்- டெர்மினல் கட்டிடத்தை இணைக்கும் ரன்வே அமைக்கும் பணிகள் தொடங்கி வேகமாக நடந்து வருகிறது. விரைவில் பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் வேலூர் விமான நிலையம் விரிவாக்கம் செய்யும் பணி வேகமாக நடந்து வருகிறது. விமான நிலையம் வசம் உள்ள 52 ஏக்கர் நிலத்துடன், விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் 68 ஏக்கர் நிலம் ஏற்கனவே கையகப்படுத்தி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வேலூர் விமான நிலையத்தை மேம்படுத்தி சென்னை, பெங்களூருக்கு சிறிய ரக விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 800 மீட்டர் கொண்ட விமான ஓடுதளம் அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. அதேபோல் பயணிகள் ஓய்வறை, உணவகம், பாதுகாப்பு, சோதனை முனையம் உள்ளிட்டவை அடங்கிய ஒருங்கிணைந்த கட்டிடம் கட்டும் பணியும் நிறைவடைந்துள்ளது. மேலும் விமானங்கள் வந்து இறங்கி செல்ல வசதியாக நடமாடும் சிக்னல் மையம் தயார் நிலையில் உள்ளது. இதற்கிடையில் அப்துல்லாபுரம்- ஆசனாம்பட்டு செல்லும் சாலை விமானத்துறை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சாலைக்கு பதிலாக விமான நிலையத்தின் இடது பக்கத்தில் தார் சாலை அமைக்கப்பட உள்ளது. புதிய மாற்றுச்சாலை 900 மீட்டர் தூரத்துக்கு அமைக்க ₹1.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது.

இதையடுத்து, அப்துல்லாபுரம்- ஆசனாம்பட்டு சாலையில் சுமார் 500 மீட்டர் தூரம் விமான நிலையத்தில் விமான ஓடுதளம் மற்றும் டெர்மினல் கட்டிடத்தை இணைக்கும் ரன்வே அமைக்கும் பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் விமான நிலையத்தின் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விமான ஓடுதளம்- டெர்மினல் பில்டிங் இணைக்கும் பகுதியில் ரன்வே அமைப்பதற்கான பணிகள் தொடங்கி உள்ளது. இந்த பணிகள் ஒரு வாரத்தில் முடிக்கப்படும். விமான நிலைய பணிகளை வேகமாக முடித்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

Related Stories: