20 செயற்கைக்கோளை ஏவ திட்டம் இந்தாண்டு முழுவதும் இஸ்ரோ ரொம்ப பிஸி: சந்திரயான் -3, ககன்யானும் பாயும்

பெங்களூரு: கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு அக்டோபர் வரை செயற்கைக்கோள்களை  விண்ணில் செலுத்தும் பணியை நிறுத்தி வைத்திருந்த இஸ்ரோ, இந்தாண்டு 20 செயற்கைக்கோள்கள், விண்கலன்களை அடுத்தடுத்து ஏவ திட்டமிட்டுள்ளது. இது குறித்து இஸ்ரோ  தலைவர் கே.சிவன் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தி வருமாறு: விண்வெளி  ஆராய்ச்சியில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நமது விண்வெளி ஆராய்ச்சி மையமும்  (இஸ்ரோ) உள்ளது. கடந்த 2019, நவம்பர் 11ம் தேதி செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. அதன் பிறகு, கொரோனா பரவல் காரணமாக, பல செயற்கைக்கோள்களை ஏவும் திட்டங்கள் நிறுத்தி  வைக்கப்பட்டன.

பின்னர், 11 மாத இடைவெளிக்குப் பிறகு கடந்தாண்டு  நவம்பர், டிசம்பர் மாதங்களில் பிஎஸ்எல்வி சி-49, சி-50 ராக்கெட்டுகள் மூலம் 2 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டன. இந்தாண்டு நிலுவையில் உள்ள எஸ்எஸ்எல்வி, ஆதித்யா எல்-1 உள்ளிட்ட 20 செயற்கைக்கோள்களையும், சந்திரயான்-3,  ககன்யான் ஆகிய விண்கலன்களையும் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது. கொரோனா  ஊரடங்கு காலத்தில் செயற்கைக்கோள்களை ஏவும் பணி நிறுத்தப்பட்டு இருந்தாலும்  கூட, ஆராய்ச்சி பணிகள் எந்த தொய்வும் இல்லாமல் நடந்தது. இஸ்ரோவின் விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களுக்கு 2021ம் ஆண்டு புதிய மைல் கல்லாக அமையும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: