ஊரடங்கால் மனித முகம் மறந்து போச்சு; பொதுமக்களை பார்த்து மிரளும் வளர்ப்பு யானைகள்: கேரளாவில் வினோதம்

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா ஊரடங்கால் மனித முகங்களை மறந்த வளர்ப்பு யானைகள் தற்போது பொதுமக்களை பார்த்து பயப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கேரளாவில் 750க்கும் மேற்பட்ட வளர்ப்பு யானைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை கோயில்களுக்கும், தனிநபர்களுக்கும் சொந்தமானவை. அவை கோயில்கள், விழாக்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. சில யானைகள் மரம் வெட்டும் இடங்களில் வேலை செய்கின்றன. கேரள யானைகள் ‘மேற்கு தொடர்ச்சி மலைகளின் மகன்கள்’ என அழைக்கப்படுகின்றன. மாநில விலங்கான யானை கேரள அரசின் சின்னத்தில் இடம்பெற்றுள்ளது. வனப்பகுதிகளில் பிடிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட யானைகளை மற்ற காட்டு யானைகள் ஏற்றுக்கொள்வதில்லை.

இந்த நிலையில் தற்போது கேரளாவில் வளர்ப்பு யானைகளுக்கு மக்களை பார்க்கும்போது பயம், அவர்தம் சத்தம் கேட்கும்போது பயம் ஏற்படுகிறது. பல யானைகள் மக்களை பார்க்காமல் கடந்த 9 மாதங்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தன. கொரோனா வைரஸ் விலங்குகளுக்கும் பரவக்கூடும் என்ற ஐயம் ஏற்பட்டது. இதனால் பாகன்கள் யாரையும் யானைகளிடம் அனுமதிக்கவில்லை. பெரும்பாலான யானைகள் கிராமங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு பொதுமக்கள் கண்ணில் படாத வகையில், ஆனால் நல்ல உணவு வழங்கி தனியாக வளர்க்கப்பட்டன. 9 மாதங்கள் தனிமைக்கு பிறகு தற்போது பல யானைகள் மக்களின் நெருக்கத்தை விரும்புவதில்லை.

அதேநேரத்தில் வாகனங்களின் சத்தம், பொதுமக்களின் சகவாசம் மற்றும் ஆரவாரத்துடன் பழகி வந்த யானைகளுக்கு எந்த பிரச்னையும் இல்லை. தனிமையில் வளர்க்கப்பட்ட மற்ற யானைகளுக்கு இந்த ‘பயம்’ பிரச்னை. இந்த நிலையில் பொதுமக்களுடன் மீண்டும் சகஜமாக பழகும் வகையில் உரிமையாளர்கள் சுவாமி எழுந்தருளல் உட்பட நிகழ்ச்சிகளுக்கு யானைகளை இலவசமாக விடுவித்து வருகின்றனர். இதன்மூலம் யானைகள் மீண்டும் மனித கூட்டத்தில் முன்புபோல நடந்து கொள்ள கற்றுக்கொள்ளும். நிகழ்ச்சிகளின்ேபாது யானைகள் வரிசையாக அருகருகில் நிறுத்தப்படுகின்றன.

இதனால் முரண்டு பிடிக்காமலும், மிரண்டு ஓடாமலும் பார்த்து கொள்ளப்படுகிறது. மேலும் யானைகளை பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் ஹாயாக நடக்க வைப்பதன் மூலமும் அவற்றின் அச்சத்தை மாற்ற உரிமையாளர்கள் மற்றும் பாகன்கள் முயற்சி ெசய்து வருகின்றனர்.

Related Stories: