ரயில்வேதுறையால் போடப்பட்ட தார்சாலை மண்சாலையாக மாறிய அவலம்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திருமயம்: திருமயம் அருகே ரயில்வே துறை மூலம் அமைக்கப்பட்ட தார்சாலை மண் சாலையாக மாறிய அவலம் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் பல முறை புகார் செய்தும் நடவடிக்கையில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள புலிவலம் ஆளில்லா கிராசிங்கை கடந்த ஆண்டு அகற்றி விட்டு சுரங்கப்பாதை அமைக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அப்போது அப்பகுதி மக்கள் சுரங்கபாதை அமைத்தால் மழை காலங்களில் சுரங்க பாதையில் நீர் தேங்குவதோடு, கனரக வாகனங்கள் செல்ல முடியாது என எதிர்ப்பு தெரிவித்து கேட் கீப்பருடன் ரயில்வே கேட் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்க மறுத்த ரயில்வே நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்வதாக கூறி மக்கள் எதிர்ப்பை மீறி புலிவலம் சாலையை புதிய வழித்தடத்தில் கண்மாயை தூர்த்து சுமார் ஒரு கிலோ மீட்டர் புதியசாலை அமைத்து செங்கீரை சாலையுடன் இணைத்தனர். இதனையடுத்து புலிவலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு இந்த மாற்று பாதை சிரமமாக இருந்த போதிலும் வேறு வழியின்றி பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை மக்கள் பயன்பாட்டுக்கு வந்த ஒரு சில மாதத்தில் பெய்த மழையில் சாலை நீரில் மூழ்கி சேதமடைந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதனை தொடர்ந்து கண்மாய் நீரில் சாலை மூழ்கிய பகுதியில் சாலையோரம் தடுப்பு சுவர் எடுத்த அதிகாரிகள் பழுதடைந்த சாலையை சீரமைக்க காலம் தாழ்த்தி வந்தனர். தற்போது கண்மாய் பகுதியில் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் சாலையை சரி செய்ய அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் அவ்வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டதோடு மழை காலங்களில் கனரக வாகனங்கள் நடுரோட்டில் புதையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே சாலையில் பள்ளம் ஏற்படும்போது வாகன ஓட்டிகள் நலன்கருதி புலிவலம் ஊராட்சி சார்பில் பள்ளத்தில் மண்கொண்டு சரி செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறாக சாலை முழுவதும் பள்ளம் ஏற்படவே ஒரு கட்டத்தில் தார் சாலை மண் சாலையாக மாறிவிட்டதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புலிவலம் சாலையை சீரமைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: