ஆகாஷ் ஏவுகணை ஏற்றுமதிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஆகாஷ் ஏவுகணை அமைப்பை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், பாதுகாப்பு தளவாடங்கள் மற்றும் ஏவுகணை உற்பத்தி திறனை இந்தியா விரிவுபடுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து, ஆகாஷ் ஏவுகணை அமைப்பை ஏற்றுமதி செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆகாஷ் ஏவுகணை அமைப்பில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் 96 சதவீதம் உள்நாட்டை சேர்ந்தவை. ஆகாஷின் ஏற்றுமதி பதிப்பு தற்போது நமது ஆயுதப்படையில் பயன்படுத்தப்படும் அமைப்பிலிருந்து வேறுபட்டதாக இருக்கும்’’ என்றார்.

இது தவிர, ரூ.7,725 கோடியில் சென்னை-பெங்களூரு தொழில் வழித்தட (சிபிஐசி) திட்டத்தின் கீழ் ஆந்திராவின் கிருஷ்ணாபட்டணம், கர்நாடகாவின் துமகுருவில் தொழில் முனையம், நொய்டாவில் மல்டி லாஜிஸ்டிக் மையம் அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எஸ்தோனியா, பராகுவே, டொமினிக் குடியரசு நாடுகளில் இந்திய தூதரகம் அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: