இலவச சிகிச்சை பெறுவதற்காக `அந்தர் பல்டி’ அடித்த பாஜ மாஜி அமைச்சர்: ராஜினாமாவை திரும்ப பெறுவதாக அறிவிப்பு

அகமதாபாத்: குஜராத்தில் பாஜ முன்னாள் அமைச்சரும், தற்போதைய மக்களவை உறுப்பினருமான மன்சுக் வசவா, தனது ராஜினாமா கடிதத்தை தலைமையிடம் கொடுத்த மறுநாளே, அதை திரும்ப பெறுவதாக பல்டி அடித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் நிறைந்த பாரூச் தொகுதியில் இருந்து 6 முறை எம்பி.யானவர் மன்சுக் வசவா. இவர், `அரசு, கட்சியுடன் எவ்வித மோதலும் இல்லை. உடல் நலக்குறைவு காரணமாக பாஜ.வில் இருந்து விலகுகிறேன். வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் எம்பி பதவியில் இருந்தும் விலகுவேன்,’ என்று அவரது ராஜினாமா கடிதத்தை மாநில பாஜ தலைவர் சிஆர். பாட்டீலிடம் நேற்று முன்தினம் கொடுத்தார். இந்நிலையில், நேற்று அவர் முதல்வர் விஜய் ரூபானியை காந்தி நகரில் சந்தித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``எனக்கு ஏற்பட்ட கழுத்து, முதுகு வலி காரணமாகவே கட்சியில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் அளித்தேன்.

ஆனால், கட்சியின் மூத்த தலைவர்கள் எம்பி.யாக இருந்தால் இலவச சிகிச்சை கிடைக்கும். எம்பி. பதவியை ராஜினாமா செய்தால் அது கிடைக்காது என தெரிவித்தனர். முதல்வருடனும் இது குறித்து ஆலோசித்தேன். கட்சியின் மூத்த தலைவர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து, ராஜினாமாவை திரும்ப பெற்றேன். எம்பி.யாக மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வேன்,’’ என்றார். ஆனால், இவரது தொகுதிக்குட்பட்ட நர்மதா மாவட்டத்தில் உள்ள 121 கிராமங்களை சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தே அவர் நேற்று முன்தினம் ராஜினாமா செய்ததாக மாநில பாஜ தலைவர் பாட்டீல் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: