குண்டும், குழியுமாக இருப்பதால் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து:வாகன ஓட்டிகள் அச்சம்

உளுந்தூர்பேட்டை: சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியாக இருப்பது உளுந்தூர்பேட்டை. தமிழகத்தில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்து, கனரக வாகனங்கள், கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் உளுந்தூர்பேட்டை வழியாகவே  சென்று வருகிறது. இதனால் தினந்தோறும் வாகன விபத்துகள் நடப்பது வாடிக்கையாகி விட்டது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தேசிய நெடுஞ்சாலையில் சாலை பராமரிப்பு செய்வதில் ஏற்பட்ட மெத்தனம் காரணமாக சாலை முழுவதும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமப்பட்டு தங்களது வாகனங்களை ஓட்டிச் செல்வதுடன், திடீரென வாகனங்கள் நிலை தடுமாறி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு, படுகாயங்கள் ஏற்படுகிறது.

சாலை பராமரிப்புக்கு என சுங்கச்சாவடிகளை அமைத்து அதிக கட்டணங்கள் வசூல் செய்து வரும் நிலையில், சாலைகளை பராமரிக்க சம்பந்தப்பட்ட துறையினர் தவறி விட்டனர். இதனை மத்திய அரசும் கண்டு கொள்வதில்லை என வாகன ஓட்டுனர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று திருச்சியில் இருந்து சென்னை நோக்கி ஒரு கார் வந்து கொண்டு இருந்தது. இந்த காரை சென்னையை சேர்ந்த கார்த்திக் (25) என்பவர் ஓட்டி வந்தார். காரில் சென்னை ஈஸ்வரன்நகர் பகுதியை சேர்ந்த சாவித்திரி (60) என்பவர் வந்துள்ளார். இந்த கார் உளுந்தூர்பேட்டை அடுத்த ஷேக் உசேன்பேட்டை என்ற இடத்தில் வந்த போது குண்டும், குழியுமான சாலையினால் நிலை தடுமாறி சாலை ஓர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு பேரும் லேசான காயம் அடைந்தனர்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த எடைக்கல் போலீசார் காயமடைந்த இரண்டு பேரையும் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்த விபத்து ஏற்பட்ட காரை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். பின்னர் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. மோசமான சாலையால் தொடர்ந்து நடைபெற்று வரும் விபத்துகள் நடக்கும் நிலையில் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பயணிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

அடிக்கடி கட்டணத்தை உயர்த்தும் டோல்கேட் நிர்வாகம் சாலைகளை பராமரிப்பது, அடிப்படை வசதிகளை செய்து தருவது போன்ற விஷயங்களில் மெத்தனமாக இருக்கிறது. தரமான சாலை வேண்டுமென்றால் கட்டணம் கட்டித்தான் ஆக வேண்டும் என்று நியாயப்படுத்தும் மத்திய அரசும் சாலைகள் பராமரிப்பை கண்டு கொள்ளாதது ஏன்? என வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே உளுந்தூர்பேட்டை பகுதியில் குண்டும், குழியுமான தேசிய நெடுஞ்சாலையை  உடனே சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: