நாட்டில் முதல் முறையாக ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

புதுடெல்லி: நாட்டிலேயே முதல் முறையாக ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். டெல்லியில் 37 கி.மீ. தூரம் கொண்ட மெஜந்தா நிற லைனில் மஜ்லிஸ் பூங்கா முதல் ஷிவ் விஹார் வழித்தடத்தில் ஓட்டுனர் இல்லாமல் தானியங்கி தொழில்நுட்பத்தில் இயங்கும் மெட்ரோ ரயில் சேவை நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. பிரதமர் மோடி வீடியோகான்பரன்ஸ் மூலமாக ரயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மேலும் பொது பயண அட்டையையும் அறிமுகம் செய்து வைத்தார்.  இதனை தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நகரமயமாக்கல் வேகத்தை அதிகரித்தது. ஆனால் அப்போது அரை மனதுடன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு எதிர்கால தேவைகளுக்கு அதிக கவனம் செலுத்தப்படவில்லை.

2014ம் ஆண்டு பாஜ ஆட்சிக்கு வந்தபோது 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில் சேவை வசதி இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கையானது 18 நகரங்களாக அதிகரித்துள்ளது. 2025ம் ஆண்டுக்குள் 25 நகரங்களில் மெட்ரோ ரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும். 2014ம் ஆண்டில் நாட்டில் 248 கிலோமீட்டர் மெட்ரோ பாதைகள் மட்டுமே இயங்கின. தற்போது இது மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 700 கிலோமீட்டருக்கும் மேல் மெட்ரோ பாதைகள் இயங்குகின்றன. 2025ம் ஆண்டில் இதனை 1700கிலோமீட்டராக விரிவுப்படுத்துவதற்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம்.  இந்த புள்ளி விவரங்கள் கோடிக்கணக்கான மக்கள் எளிதான வாழ்க்கை வாழ்வதற்கான மற்றும் குடிமக்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்பட்டதற்கான சான்றாகும்.

4 பெரிய நிறுவனங்கள் நாட்டில் மெட்ரோ ரயில்பெட்டிகளை உருவாக்கி வருகின்றன. மேலும் 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மெட்ரோ ரயிலுக்கான பகுதி பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றன. சுயசார்பு இந்தியா பிரசாரத்துக்கு இது உதவுகின்றது. இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Related Stories: