'முதலமைச்சர் பதவி மீது எனக்கு ஆசையில்லை': பா.ஜ.க. தங்கள் முதலமைச்சரை தேர்வு செய்யலாம்.. நிதிஷ்குமார் திடீர் அறிவிப்பு

பாட்னா: ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ள நிதிஷ்குமார் பீகார் முதலமைச்சராக தான் ஆசைப்படவில்லை எனவும் பா.ஜ.க. தங்கள் முதலமைச்சரை தேர்வு செய்யலாம் எனவும் கூறியுள்ளார். பீகாரில் பாரதிய ஜனதா கட்சி, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், இரு கட்சிகளுக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அருணாச்சலப்பிரதேசத்தில் கடந்த வாரம் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த 6 எம்.எல்.ஏக்கள் பா.ஜ.க-வில் இணைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதேநிலை பீகாரிலும் ஏற்படவுள்ளதாக தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் குற்றம்சாட்டியது.

இந்நிலையில் நேற்று கூடிய ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசியக் குழு கூட்டத்தின் போது கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நிதிஷ்குமார் அறிவித்தார். 2019ம் ஆண்டு கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிதிஷ்குமாரின் பதவிக்காலம், 2022ம் ஆண்டு வரை உள்ள நிலையில் அவர் விலகியது சர்ச்சைகளை வலுவாக்கியது. இதனை அடுத்து புதிய தலைவராக ஆர்.பி.சிங் எனப்படும் ராமசந்திர பிரசாத் சிங் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் தனக்கு முதலமைச்சர் பதவி மீது விருப்பம் இருந்ததில்லை என்றும் பா.ஜ.க-வினர் விரும்பினால் முதலமைச்சர் பதவியை எடுத்துக் கொள்ளலாம் என்றும் நிதிஷ்குமார் கூறியுள்ளார். இதனால் இரு கட்சிகளுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: