மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் பணிகள் படிப்படியாக துவங்கும்

புதுடெல்லி: ‘மகாராஷ்டிராவில் நிலம் கையகப்படுத்தும் பணி தாமதமாக நடப்பதால், மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் பாதை திட்டப் பணிகள் படிப்படியாக தொடங்கும்,’ என ரயில்வே வாரியத் தலைவர் ஒய்.கே.யாதவ் தெரிவித்துள்ளார். மும்பை - அகமதாபாத் இடையே 508 கிமீ தூரத்துக்கு புல்லட் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் கனவு திட்டமான இதற்கு, ‘அதிவேக ரயில்வே சேவை திட்டம்’ என பெயரிடப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டுக்குள் இத்திட்டத்தை முடித்து, ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஆனால், மகாராஷ்டிராவில் பால்கர் போன்ற பகுதிகளில் இத்திட்டத்துக்கான  நிலங்களை கையகப்படுத்துவது பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் எதிர்ப்பால் தாமதமாகி வருகிறது. இருப்பினும், அடுத்த 4 மாதங்களில் நிலத்தை கையகப்படுத்தும் பணி 80 சதவீதம் முடியும் என மகாராஷ்டிரா அரசு உறுதி அளித்துள்ளது.

இது தொடர்பாக ரயில்வே வாரிய தலைவர் ஒய்.கே.யாதவ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘மகாராஷ்டிராவில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் தாமதம் காரணமாக இந்த திட்டத்தை படிப்படியாக செயல்படுத்த, ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. குஜராத்தில் நிலம் கையப்படுத்துவதில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. எனவே, முதல் கட்டமாக அகமதாபாத்தில் இருந்து குஜராத்தின் வாபி வரையில் பாதை அமைக்கப்பட்டு, புல்லட் ரயிலை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது,” என்றார்.

Related Stories: