மத்திய அரசுடன் நாளை காலை 11 மணிக்கு பேச்சு: விவசாய சங்கங்கள் அறிவிப்பு

புதுடெல்லி: வேளாண் சட்டங்கள் ரத்து பிரச்னை குறித்து நீண்ட இழுபறிக்குப் பிறகு மத்திய அரசுடன் நாளை காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக, டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி, பஞ்சாப், அரியானா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 40 விவசா ய சங்கங்களை சேர்ந்தவர்கள் டெல்லி எல்லையில் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று இந்த போராட்டம் ஒரு மாதத்தை கடந்தது. மத்திய அரசுக்கும், விவசாய சங்கங்களுக்கும் ஏற்கனவே நடந்த 5 சுற்று பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், பேச்சுவார்த்தை நடத்த விவசாய சங்கங்கள் மறுத்து விட்டன. பேச்சுவார்த்தைக்கு வரும்படி மத்திய அரசு தொடர்ச்சியாக விடுத்த வேண்டுகோளை ஏற்பது தொடர்பாக, விவசாய சங்கங்கள் ஆலோசனை நடத்தி வந்தன. சட்டங்களை ரத்து செய்வதாக இருந்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வர முடியும் என அவை கூறி வந்தன. இந்நிலையில், 40 விவசாய அமைப்புகள் இணைந்த கூட்டு அமைப்பான, ‘சன்யுக்த் கிசான் மோர்ச்சா’வின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்றும் நடந்தது. இதில், மத்திய அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடர்வது என இறுதி முடிவு எடுக்கப்பட்டது.

இக்கூட்டத்துக்குப் பிறகு மத்திய வேளாண்துறை செயலாளர் விவேக் அகர்வாலுக்கு, அவர்கள் அனுப்பிய கடிதத்தில், ‘மத்திய அரசு - விவசாய சங்க பிரதிநிதிகள் இடையிலான பேச்சுவார்த்தையை 29ம் தேதி காலை 11 மணிக்கு நடத்தலாம்,’ என கூறப்பட்டது. இது பற்றி பாரதிய கிசான் யூனியன் அமைப்பின் மூத்த தலைவர் திகெயித் கூறுகையில், ‘‘பேச்சுவார்த்தைக்கான தேதி, நேரத்தை நாங்கள் முடிவு செய்து கூறியிருக்கிறோம். இனிமேல், இது பற்றி முடிவு எடுப்பது மத்திய அரசிடம்தான் உள்ளது,’’ என்றார்.

30ம் தேதி டிராக்டர் பேரணி

* டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 30ம் தேதி குண்ட்லி- மானேசர் - பல்வால் 6 வழிச்சாலையில் பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர்.

* டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள், டெல்லியில் போராட்டம் நடத்தி தங்களுடன் வரும் 31ம் தேதி இரவு புத்தாண்டை கொண்டாட வேண்டும் என்று விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

* டெல்லியில் கடும் குளிர் நிலவி வருவதால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இருப்பினும், அவர்கள் போராட்டத்தில் உறுதியாக இருக்கின்றனர்.

* பாஜ தலைவர் ஜேபி. நட்டா நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘விவசாயிகள் தங்கள் விளைப் பொருட்களை சந்தையில் நேரடியாக விற்க வேண்டும். இடைத்தரகர்களை விரட்ட வேண்டும்,’ என்று மக்களவையில் கடந்த காலத்தில் பேசிய வீடியோ காட்சியை வெளியிட்டு, ‘இது என்ன ராகுல்ஜி’ என்று கேட்டுள்ளார்.

* பிரதமர் மோடி நேற்று ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் வானொலியில் உரையாற்றிய போது, டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து தட்டுகளை தட்டி ஓசை எழுப்பினர்.

* டெல்லியில் திக்ரி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் இடத்துக்கு  அருகே, பஞ்சாப்பை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

176 செல்போன் டவர்கள் உடைப்பு

* பஞ்சாப்பில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், அம்பானி, அதானி நிறுவனங்களுக்கு சொந்தமான அலுவலகங்கள், கட்டமைப்புகளை அடித்து நொறுக்கி வருகின்றனர். நேற்று அவர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 176க்கும் மேற்பட்ட ஜியோ செல்போன் டவர்களை அடித்து நொறுக்கினர். இதனால், மாநிலத்தில் செல்போன் சேவை பாதிக்கப்படுவதால் இந்த வன்முறையை கைவிடும்படி பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories: