காங். எம்எல்ஏ பாஜவில் ஐக்கியம்: அசாமில் அமித் ஷாவுடன் திடீர் சந்திப்பு

கவுகாத்தி: அசாம் மாநில காங்கிரஸ் பெண் எம்எல்ஏ ஒருவர், அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர உள்ளதாக தெரிவித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக அமித் ஷாவை திடீரென சந்தித்தார். அசாம் மாநில முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோலகாட் தொகுதி எம்எல்ஏவுமான அஜந்தா நியோக், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அவர் வகித்து வந்த கோலாகட் மாவட்டத் தலைவர் பதவியிலிருந்து காங்கிரஸ் கட்சி நீக்கியது. காங்கிரஸ் சாா்பில் நான்கு முறை அசாம் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அஜந்தா நியோக், பாஜகவை சேர்ந்த மாநில முதல்வர் சர்வானந்த சோனோவாலை கடந்த சில நாட்களுக்கு முன் சந்தித்துப் பேசினார்.

மேலும், வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் ஹிமந்த விஸ்வ சர்மாவையும் அவர் சந்தித்திருந்தாா். இத்தகைய சூழலில், அஜந்தா நியோகை கோலாகாட் மாவட்டத் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதாக மாநில கட்சித் தலைமை அறிவித்தது. கட்சியின் முக்கியப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது தொடர்பாக அஜந்தா நியோக் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், அவர் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது 2 நாட்கள் பயணமாக அசாமில் தேர்தல் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார்.

அவரை, திடீர் திருப்பமாக காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட அஜந்தா நியோக் நேற்று சந்தித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்படவில்லை. ஆனால், என்னால் எனது கருத்துக்களை கட்சிக்குள் வெளிப்படுத்த முடியவில்லை. அதனால், தற்போது காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிவிட்டேன். ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் பாஜகவில் சேரப்போகிறேன்’ என்றார். அசாமில் அடுத்தாண்டு பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: