5 வயது மகள் குப்பையில் வீச்சு; எலி மருந்து தின்று தற்கொலைக்கு முயன்ற பெண் டாக்டருக்கு சிகிச்சை: ஊரடங்கு வருவாய் இழப்பால் தவிப்பு

அவிநாசி: கொரோனா ஊரடங்கால் வருவாய் இழப்பு ஏற்பட்டதால் கர்நாடக பெண் டாக்டர், இருமல் டானிக் கொடுத்து மகளை குப்பையில் வீசிவிட்டு, எலி மருந்து தின்று தற்கொலைக்கு முயன்றார். இருவரும் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தண்டுகாரம்பாளையம் ஊராட்சியின் குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் மாலை 5 வயது சிறுமி மயங்கிய நிலையில் கிடந்தது. தகவலறிந்த சேவூர் போலீசார், சிறுமியை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது, 35 வயது பெண் ஒருவர் குழந்தையுடன் வந்து சென்றது தெரிய வந்தது.

அந்த பெண் முககவசம், கண்ணாடி அணிந்திருந்ததால் முகம் தெரியவில்லை. இந்நிலையில், தண்டுக்காரம்பாளையம் கிராம மக்கள் சந்தேகம் அளிக்கும் வகையில் பெண் ஒருவர் ஊருக்குள் சுற்றி வருவதாக சேவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடம் சென்று அந்த பெண்ணை மீட்டனர். அப்போது அவர் எலிமருந்தை தின்றதாக தெரிவித்தார். போலீசார் அவரையும் திருப்பூர் அரசுமருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில் குழந்தையை கொண்டு வந்து குப்பை கிடங்கில் வீசியது அந்த பெண்தான் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர், கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சைலஜாகுமாரி(38).

காது,மூக்கு,தொண்டை மருத்துவர் என்பது தெரிய வந்தது. இவரது கணவர் தர்மபிரசாத்(42). இன்ஜினியர். இவர்களது மகள் க்யாரா(5). கருத்து வேறுபாடு காரணமாக தம்பதியர் பிரியவே, மகளுடன் சைலஜாகுமாரி பெங்களூருவில் தனியே தங்கி கிளினிக் நடத்தி வந்துள்ளார். கொரோனா ஊரடங்கால் வருவாய் இன்றி மனஉளைச்சலுக்கு ஆளான சைலஜாகுமாரி வேலை தேடி பல மருத்துவமனைகளுக்கு அலைந்துள்ளார். வேலை கிடைக்காத நிலையில், பெங்களூருவில் இருந்து பேருந்தில் மகளுடன் திருப்பூர் புறப்பட்டார். சிறுமிக்கு வாந்தி, மயக்கம் ஏற்படவே அவிநாசி அருகே தண்டுகாரன்பாளையத்தில் மகளுடன் பஸ்சில் இருந்து இறங்கி உள்ளார்.

அருகே உள்ள மெடிக்கல் ஷாப்பில் இருமல் டானிக்கை வாங்கி அதை மகளுக்கு கொடுத்து மயங்க செய்தார். பின்னர், மகளை அருகில் உள்ள குப்பை கிடங்கிற்கு கொண்டு சென்று படுக்க வைத்துள்ளார். பின்னர் எலிமருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. இந்நிலையில் மேல்சிகிச்சைக்காக சைலஜாகுமாரி, க்யாரா இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: