குழந்தை பருவ கனவை நிறைவேற்ற 64 வயதில் ‘நீட்’ தேர்வெழுதி மருத்துவ படிப்பில் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்: ஒடிசா மக்கள் நெகிழ்ச்சி

புவனேஸ்வர்: ஒடிசாவில் தனது குழந்தை பருவ கனவை நிறைவேற்ற 64 வயதில் ‘நீட்’ தேர்வெழுதி மருத்துவ படிப்பில் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி ஊழியரை பலரும் பாராட்டி வருகின்றனர். ஒடிசா மாநிலம் பார்கர் மாவட்டத்தின்  பாலுபாலியைச் சேர்ந்தவர் ஜெய்கிஷோர் பிரதான் (64). ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் (எஸ்பிஐ) பணியாற்றி கடந்த 2016ம் ஆண்டு ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் ஆவார். இவரது மகள் ஜோதிபிரபா தற்போது பிலாஸ்பூரில் உள்ள பச்லர் இன்  டென்டல் சயின்ஸ் (பிடிஎஸ்) இரண்டாம் ஆண்டு படிப்பு படித்து வருகிறார். இவரது மகன் ஜெய்ஜித் தற்போது 10ம் வகுப்பு படிக்கிறார். ஜெய்கிஷோர் பிரதானுக்கு சிறு வயதில் இருந்தே தான் ஒரு மருத்துவராக வேண்டும் என்று விரும்பினார்.  ஆனால், காலசூழ்நிலையில் வங்கி ஊழியராகத்தான் முடிந்தது.

இருந்தும் தனது மகன் ஜோதி பிரபாவை பல் மருத்துவர் படிப்புக்கு படித்துவைத்து வருகிறார். வங்கிப் பணியில் இருந்து ஓய்வுபெற்ற ஜெய்கிஷோர் பிரதான், தனது ஆரம்பகால ஆசையான மருத்துவர் படிப்பு படிக்க வேண்டும் என்ற விருப்பத்தை  தனது மகளிடம் தெரிவித்தார். ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கிய ஜெய்கிஷோர் பிரதான் தற்போது மாற்றுத்திறனாளியாகவும் உள்ளார். பி.எஸ்சி இயற்பியல் பட்டப்படிப்பை முடித்திருந்த இவர், மருத்துவ படிப்பில்  சேர்வதற்கான தகுதித் தேர்வான ‘நீட்’ தேர்வுக்கு ஆயத்தமானார். அதன்படி சமீபத்தில் நடந்து முடிந்த ‘நீட்’ தேர்வில் தேர்ச்சியடைந்தார்.

அதனால், மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு அடிப்படையில் அவருக்கு மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கான ‘சீட்’ கிடைத்தது. தனது 64வது வயதில் வீர் சுரேந்திர சாய் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் ரிசர்ச் (விம்சார்)  மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் மாணவராக கவுன்சிலிங் மூலம் தேர்வாகி உள்ளார். தனது குழந்தை பருவ கனவை நிறைவேற்றத் தொடங்கியுள்ள ஜெய்கிஷோர் பிரதானை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து அவர் மகிழ்ச்சியுடன்  கூறுகையில், ‘நீட் தேர்வுக்காக தினசரி 10 மணி நேரம் முதல் 12 மணி வரை படித்து வந்ததால், தேர்வை எளிதில் எதிர்கொள்ள முடிந்தது. எனது தந்தைக்கு செய்த அல்சர் அறுவை சிகிச்சை காரணமாக அவர்  கூடுதலாக 30 ஆண்டுகள் வாழ்ந்தார். அதனால், எனக்க மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசை மேலும் அதிகரித்தது’ என்றார்.

Related Stories: