பாணாவரம் அருகே சேற்றில் இறங்கி அறுவடை மழையால் அழுகிய நெற்பயிரில் கிடைப்பதை சேகரிக்கும் விவசாயிகள்: தண்ணீர் வடிந்தும், வடியாத கண்ணீர்

பாணாவரம்:  பாணாவரம் அருகே மழை வெள்ளத்தால் அழுகிய நெற்பயிரில் கிடைக்கும் நெல்மணிகளை சேகரிக்க சேற்றில் இறங்கி விவசாயிகள்  அறுவடையில் ஈடுபட்டுள்ளனர்.ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகே பொன்னப்பன்தாங்கள் கிராமத்தை சேர்ந்த விவசாயிக்கு சொந்தமாக சோளிங்கர்- காவேரிப்பாக்கம்  சாலையில், 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் நெற்பயிர் நடவு செய்திருந்தார்.நெல்மணிகள் அறுவடைக்கு தயாரான நிலையில், நிவர் மற்றும் புரெவி புயல்களால் பெய்த கனமழையால் பயிர்கள் மூழ்கியது. மேலும் மழை  வெள்ளம் வடியாத காரணத்தினால் நெற்பயிர்கள் அழுகியது. எனவே கிடைப்பதை எடுத்துக் கொள்ள ஆட்களை வைத்து ஆங்காங்கே கால்வாய்கள்  வெட்டி மழைநீரை வெளியேற்றினார். ஆனாலும் தண்ணீர் முழுமையாக வெளியேற்ற முடியாததால், நெல்மணிகளை சேகரிக்க முடியவில்லை.

தற்போது தண்ணீர் வற்றி, சேறும் சகதியுமான நிலத்தில் நெற்பயிர்கள் அழுகி உள்ளது. இதனால் கிடைக்கும் நெல்மணிகளை சேகரிக்கும் முயற்சியில்  விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக சேற்றில் இறங்கி ஆங்காங்கே கிடைக்கும் பயிர்களை அறுவடை செய்து வருகின்றனர்.இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி கூறுகையில், ‘அறுவடைக்கு தயாரான நேரத்தில் மழையால் நெற்பயிர்கள் மூழ்கிவிட்டது. வெள்ளம் வடிந்த  பின்னர் அழுகியது போக மிச்சம் மீதியை சேகரித்தோம். ஆனால் முதலீடு பணம் 10 சதவீதம் கூட கிடைக்கவில்லை. விவசாய நிலங்களில் மழை வெள்ளம் வடிந்தாலும், விவசாயிகளின் கண்ணீர்  வடிந்தபாடில்லை. எனவே தமிழக அரசு உடனடியாக விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கண்ணீரோடு  கூறினார்.

Related Stories: