கொரோனா 2வது அலை பரவலால் பள்ளி,கல்லூரிகள் திறப்பதில் அரசுக்கு விவேகம் அவசியம்: முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆலோசனை

பெங்களூரு: பள்ளி, கல்லூரிகள் திறக்கும் விஷயத்தில்  வேகத்திற்கு  பதில்  விவேகமாக அரசு செயல்பட வேண்டும் என்று மாஜி முதல்வர் குமாரசாமி கூறினார். கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம் ஜனவரி 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என    அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார், கல்வி நிபுணர்கள்  உள்ளிட்டோர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி முதல்வர் எடியூரப்பாவிடம் அறிக்கை அளித்தனர்.

நிபுணர்களின் அறிக்கையை பரிசீலனை நடத்திய முதல்வர் எடியூரப்பா அடுத்த மாதம் ஜனவரி 1ம் தேதி பத்தாம் வகுப்பு மற்றும் பியூசி வகுப்பு  தொடங்கும் என அறிவித்தார். இதைத்தொடர்ந்து பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகளை திறப்பதற்காக கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இது போன்ற சூழ்நிலையில் கொரோனாவின் மறு உருவம் என கூறப்படும் பி 117 என்ற வைரஸ்  இங்கிலாந்தில் மனிதர்களை தாக்கி கொல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்தியா அரசு இங்கிலாந்தில் இருந்து விமான போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளது.

அத்துடன் வெளிநாட்டில் இருந்து இந்தியா வருகிற அனைவரும் தீவிரமாக பரிசோதனை செய்யப்படுகின்றனர். இது போன்ற சூழ்நிலையில் மாநிலத்தில் பள்ளிக்கூடம் திறப்பதற்கு அவசரம் காண்பிக்கவேண்டாம் என்று மாஜி முதல்வர் குமாரசாமி மாநில அரசுக்கு  எச்சரிக்கை  விடுத்துள்ளார். இது தொடர்பாக நிருபர்களிடம் குமாரசாமி கூறியதாவது: கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் முழுமையாக தடுக்கப்படவில்லை.  கொரோனா வைரசின் மேம்பட்ட உருவம் என கூறப்படும் மற்றொரு வைரஸ் பரவல் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 முககவசம், கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும் என்று அரசு மக்களிடம் கூறிக்கொண்டே இருக்கிறதே தவிர அதை தடுப்பதற்கு மாநில அரசு உறுதியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வருகிற ஜனவரி மாதம் 1ம்தேதி முதல்  பள்ளிக்கூடம் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலினால் ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் மாணவ மாணவிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவின் காரணமாக  உயிரிழந்த  ஆசிரியர்களுக்கு நிவாரண  தொகை வழங்கப்படவேண்டும். ஆனால் மாநில அரசு இன்னும் நிவாரணம் வழங்கவில்லை.

இது போன்ற சூழ்நிலையில் மாணவ மாணவிகளின் வாழ்க்கையில் மாநில  அரசு விளையாடுகிறது. ஜனவரி மாதம் 1ம் தேதி பள்ளிக்கூடம் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு சரியானது கிடையாது. பள்ளிக்கூடம் திறக்கப்படுவதால் மாணவ மாணவிகள் எதிர்காலம் மோசமாக பாதிக்கப்படும் என்பதை அரசு உணரவேண்டும். டிசம்பர் வரை கல்வி கூடங்கள் செயல்படவில்லை. இன்னும் ஓரிரு மாதம் கழித்து திறந்தால் மாணவ மாணவிகளுக்கு பெரிய அளவில்  பாதிப்பு ஏற்படாது. எனவே ,மாநில அரசு ஜனவரி மாதம் 1ம் தேதி பள்ளிக்கூடம் திறக்கப்படும் என்ற அறிவிப்பை தளர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளிக்கூடம் இவ்வளவு நாள் திறக்கப்படவில்லை. இன்னும் ஓரிரு மாதம் திறக்கவில்லை என்றால் அதனால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படாது.  இரவு ஊரங்கு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின்  யோசனைகளை ஆளும்கட்சி முற்றிலும் புறக்கணித்தது என்றார்.

மாணவ மாணவிகளின் வாழ்க்கையில் மாநிலஅரசு விளையாடுகிறது. ஜனவரி மாதம் 1ம் தேதி பள்ளிக்கூடம் தொடங்கப்படும் என்ற  அறிவிப்பு சரியானது கிடையாது

Related Stories: