ராமேஸ்வரம் கோயிலில் பிளாஸ்டிக்குக்கு தடை: தாமிர பாத்திரங்களில் கோடி தீர்த்தம் விற்பனை

ராமேஸ்வரம்: பிளாஸ்டிக் தடை எதிரொலியாக ராமேஸ்வரம் கோயிலில் கோடி தீர்த்தத்தை தாமிர பாத்திரத்தில் அடைத்து விற்பனை செய்ய கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ராமேஸ்வரம், ராமநாத சுவாமி கோயில் சுவாமி சன்னதியில் கோடி தீர்த்தம் அமைந்துள்ளது. ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பிறகு இந்த கோடி தீர்த்தத்தில் குளித்தால்தான் தீர்த்த யாத்திரை நிறைவு பெறும்.

ராமநாத சுவாமிக்கும் கோடி தீர்த்தம் மூலமே அபிஷேகம் செய்யப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோடி தீர்த்தம், விபூதி வழங்குவது வழக்கம். இதுநாள் வரை கோடி தீர்த்தத்தை பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து கோயில் நிர்வாகம் விற்பனை செய்து வந்தது.

ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்கள் பயன்படுத்த ஏற்கனவே நிரந்தர தடை உள்ளது. இதையடுத்து 50 மில்லி, 100 மி, 250 மி, 500 மில்லி என 4 அளவுகளில் சிறிய தாமிர பாத்திரங்களில் கோடி தீர்த்த நீரை அடைத்து பக்தர்களிடம் விற்பனை செய்ய கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. விரைவில் விற்பனை துவங்க உள்ளது என நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Related Stories: