கோட்லா மைதானத்தில் அருண் ஜெட்லி சிலை டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் பிஷன் சிங் பேடி விலகல்

புதுடெல்லி: மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் சிலை வைப்பது எனும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்க (டிடிசிஏ) உறுப்பினர் பதவியை சுழற்பந்து சிங்கம் பிஷன் சிங் பேடி உதறி இருப்பது பரபரப்பாகி உள்ளது. கிரிக்கெட் சகாப்தத்தில் பிஷன் சிங் பேடியின் சுழற்பந்து உலகளவில் பெருமை பேசியது யாராலும் மறுக்க முடியாது. இங்கிலாந்து, மேற்கிந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு நிகராக பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சாதிக்க இந்திய வீரர்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் வீரர்கள் 1970 மற்றும் 80ம் ஆண்டுகளில் இருந்தனர். ஸ்பின் பவுலராக பிஷன் சிங் பேடி கிர்க்கெட்டில் நுழைந்த பின்னர், இந்திய அணியை எதிர்த்து விளையாட துணிச்சலான அணிகளும் தயங்கின. ஸ்பின் பவுலங்கில் பல சாதனைகளை படைத்து தற்போது மதிப்பு மிக்க கிழட்டு சிங்கமாக உள்ள பேடி, டிடிசிஏ நிரந்தர உறுப்பினராக உள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 2014ம் ஆண்டு பாஜ ஆட்சி அமைந்ததும், நிதியமைச்சராக பதவியேற்ற அருண் ஜெட்லி, தீராத நோய் காரணமாக கடந்த ஆண்டு இறந்தார். கடந்த 1999ம் ஆண்டு தொடங்கி 2013ம் ஆண்டு வரை 14 ஆண்டுகள் டிடிசிஏ தலைவராக பதவி வகித்த ஜெட்லியை நினைவு கூறும் வகையில் பெரோஸ் ஷா கொட்லா மைதானத்தில் அவருக்கு 6 அடிய உயர முழு சிலை திறக்க டிடிசிஏ தீர்மானித்தது. சிலை திறப்பு தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டிடிசிஏ தலைவராக தற்போது பதவி வகிக்கும் ஜெட்லியின் மகன் ரோஷன் ஜெட்லிக்கு காட்டமான கடிதம் அனுப்பியுள்ள பிஷண் சிங் பேடி, டிடிசிஏவில் இருந்து விலகுவதாகவும் அதில் தெரிவித்துள்ளார். கடிதத்தில் பேடி கூறியிருப்பதாவது:பெரோஸ் ஷா கொட்லா மைதானத்தில் அருண் ஜெட்லி சிலை திறக்கும் டிடிசிஏ முடிவை எதிர்க்கிறேன்.

சங்கத்தில் கிரிக்கெட் வீரர்களைக் காட்டிலும் நிர்வாகிகளுக்குத் தான் முன்னுரிமை அளிப்பதாக உங்களது நடவடிக்கையை கருதுகிறேன். எனவே, பார்வையாளர் அரங்கின் ஒரு பகுதிக்கு சூட்டப்பட்ட எனது பெயரையும் உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். மேலும் எனது உறுப்பினர் பதவியையும் மன வேதனையுடன் ராஜினாமா செய்கிறேன். எனக்கு மதிப்பளித்து அரங்கின் ஒரு பகுதிக்கு சூட்டப்பட்ட எனது பெயரை நானே அவமதிப்பதாக கருத வேண்டாம். விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்று 40 ஆண்டு ஆகியும், இன்னமும் என்னை மக்கள் மதிப்பதே போதுமானது. அருண் ஜெட்லியின் செயல் நடவடிக்கையை விரும்பும் ரசிகனாக நான் ஒரு போதும் இருந்ததில்லை என இங்கு குறிப்பிடுவது நியாயமானது. அவரது ஒவ்வொரு முடிவுகளையும் எதிர்த்தவன் நான். அவரும் எனது எதிர்ப்புக்கு உடன்பட்டதில்லை.

ஒரு முறை அவரது வீட்டில் நடைபெற்ற டிடிசிஏ ஆலோசனை கூட்டத்தை புறக்கணிப்பு செய்து வெளியேறிய போது, கேவலமாக என்னை பேசியது இப்போதும் நினைவில் உள்ளது. அவரது தலைமையில் கொட்லா மைதானத்தில் ஊழல் பெருக்கெடுத்த போது, நானும் அதில் ஒரு அங்கமாக இருந்தது எனக்கு அவமானமாக உள்ளது. தற்போதுள்ள தலைமையும் அதே துதி பாடலில் செயல்படுவதாக தோன்றுகிறது. கொட்லா மைதானத்தின் பெயரை அருண் ஜெட்லி பெயருக்கு மாற்றி மத்திய அரசு அவசர அவசரமாக அறிவித்த போதே, கொட்லா மைதானத்தின் புனிதம் பறி போனதாக கருதுகிறேன். என்னை பொருத்த மட்டிலும் அருண் ஜெட்லி ஒரு அரசியல்வாதி மட்டுமே. அவரை பெருமை செய்யக் கருதினால், நாடாளுமன்றம் தான் அதை தீர்மானிக்க வேண்டும். இவ்வாறு அவர் கடிதத்தில் புகாராக அடுக்கி தனது பதவி விலகலையும் அதற்கான காரணத்தையும் அடுக்கியுள்ளார்.

Related Stories: