தத்த ஜெயந்தி விழாவையொட்டி சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை: கலெக்டர் பகாதி கவுதம் அறிவிப்பு

சிக்கமகளூரு: சிக்கமகளூருவில் தத்த ஜெயந்தி விழாவையொட்டி பாபாபுடன்கிரி உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் பகாதி கவுதம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட கலெக்டர் பகாதி கவுதம் கூறும்போது; சிக்கமகளூருவில் 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை தத்த ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த விழாவையொட்டி பொது கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த மாவட்ட கலெக்டர் பகாதி கவுதம் அனுமதி வழங்கியுள்ளார். அதன்படி 27ம் தேதி இரவு பாபாபுடன்கிரியில் சிறப்பு சாமி தரிசனம் நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். 28ம் தேதி பிரமாண்ட ஊர்வலம் நடைபெறுகிறது. 29ம் தேதி தத்த பாத தரிசனம் செய்ய பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறுவதுபோன்று இல்லாமல் இந்த ஆண்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாட்டுடன் விழா நடைபெறுகிறது.

குறிப்பாக கொரோனா தொற்று காரணமாக, அதற்கான விதிமுறைகள் கடைபிடிக்கும்படி கூறப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்கள், கலவரங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும், விஷமிகளை கண்காணிக்கவும் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர விழாவில் கலந்து கொள்பவர்களுக்கு செல்போன் மற்றும் கேமராக்கள் எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் தத்த ஜெயந்தி விழாவையொட்டி 25ம் தேதி மாலை 6 மணி முதல் 30ம் தேதி 6 மணி வரை சுற்றுலா தளங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாபா புடன்கிரி, முல்லையங்கிரி, சீதாலையன்கிரி, மானிக்கதாரா அருவி, ஹொன்னமன்னா அருவிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் பகாதி கவுதம் தெரிவித்துள்ளார்.

Related Stories: