டெல்லியில் 28வது நாளாக விவசாயிகள் போராட்டம்: கருப்பு கொடி காட்டியதால் அரியானா முதல்வர் ஓட்டம்.!!!

புதுடெல்லி: டெல்லியில் 28வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடைபெறும் நிலையில் அம்பாலாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற முதல்வருக்கு விவசாயிகள் கருப்பு கொடி காட்டியதால் அவரது வாகனம் வேறு வழியில் அழைத்து  செல்லப்பட்டது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லி எல்லையில் கடந்த 28 நாட்களாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசுடன் நடத்தப்பட்ட 5 கட்ட  பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால், அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

ஆனால், விவசாயிகள் தரப்பில் மத்திய அரசின் பேச்சுவார்த்தையில் பங்கேற்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து இன்று மாலை ஆலோசனை நடத்தி முடிவெடுக்க உள்ளனர். இதற்கிடையே நேற்று முன்தினம் உண்ணாவிரத போராட்டம்  நடத்திய நிலையில் நேற்று பட்டினி போராட்டம் நடத்தினர். இன்று தேசிய உழவர் தினம் என்பதால் விவசாயிகள் மதிய உணவை கைவிட்டு போராட்டம் நடத்துகின்றனர். மூன்றாம் நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டமும் இன்று  தொடர்கிறது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்குழுவினர் கூறுகையில், ‘வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெறவேண்டும் என்று தான் போராட்டம் நடத்தி வருகிறோம்.

ஆனால், அரசு சட்டங்களை திரும்ப பெற முடியாது, திருத்தங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கூறிவருகிறது. பேச்சுவார்த்தைக்கு செல்வதா வேண்டாமா என்பது குறித்து இன்று மாலை இறுதி முடிவு எடுக்கப்படும்’ என்றனர்.

இதனிடையே நேற்று அரியானா மாநிலத்தில் பாஜக முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கு எதிராக விவசாயிகள் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.

அம்பாலாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்தபோது அவருக்கு கருப்புக் கொடி காட்டப்பட்டது. அவர்கள் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினர். தடியடி நடத்தியும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால், பின்னர்  முதல்வரை போலீசார் திருப்பி வேறு பாதையில் அழைத்துச் சென்றனர். இம்மாநில விவசாயிகள் வருகிற 26, 27, 28ம் தேதிகளில் அனைத்து சுங்கச்சாவடிகளையும் முடக்கி வரி வசூலிப்பதை முடக்கப்போவதாகக் கூறியுள்ளனர்.

Related Stories: