பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் பிச்சைக்காரர்

மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு தாலுகா, ஹுலிமாவு கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட போக்கஹள்ளி கிராமத்தில் 4 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது. இதில் 9 பேர் களத்தில் உள்ளனர். இத்தனை காலம் கிராம பஞ்சாயத்து உறுப்பினர், ஏன் தலைவராக இருந்தவர்கள்கூட கிராமத்தில் எந்த விதமான வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகிறார்கள். கிராமத்தில் குறைந்தப்பட்ச அடிப்படை வசதிகள்கூட செய்து கொடுக்கவில்லை என்பது கிராமத்தில் வாழும் இளைஞர்களின் கருத்தாக இருந்தது.

இந்நிலையில் தேர்தலில் வசதிப்படைத்தவர்களை எதிர்த்து சாமானிய வேட்பாளரை நிறுத்த இளைஞர்கள் முடிவு செய்தனர். அதே கிராமத்தில் பிச்சை எடுத்தும், சில வீடுகளில் ேவலை செய்து வயிறு கழுவிவரும் அங்கநாயக்கை களத்தில் நிறுத்த முடிவு செய்தனர். அவருக்கு முடிதிருத்தி, குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து, கூலிங் கிளாஸ் போட்டு, காரில் அழைத்து சென்று மனு தாக்கல் செய்தனர். பணக்காரர்களை பணமில்லாதவரை வைத்து தோற்கடிக்க வேண்டும் என்பது எங்களின் நோக்கம் என்று இளைஞர்கள் தெரிவித்தனர்.

Related Stories: