சாதாரண உடையில் எல்லை தாண்டி ஊடுருவிய சீன வீரர்கள் விரட்டியடித்த கிராமத்தினர்: காஷ்மீர் லே பகுதியில் பரபரப்பு

ஸ்ரீநகர்: இந்திய எல்லையில் சாமானிய மக்களைப் போல் உடையணிந்து ஊடுருவிய சீன வீரர்களை பாதுகாப்பு படையினரும், கிராமமக்களும் சேர்ந்து விரட்டியடித்தனர். கிழக்கு லடாக்கில் கடந்த 8 மாதங்களாக இந்தியா-சீனா இடையே மோதல் போக்கு நிலவி வருகின்றது. இந்த விவகாரம் தொடர்பாக இருநாட்டு ராணுவ உயரதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.  இந்நிலையில் லேவுக்கு கிழக்கே லடாக்கின் சங்க்தாங் கிராமத்தில் இரண்டு வாகனங்களில் சீன வீரர்கள் இந்திய எல்லையை தாண்டி வந்துள்ளனர். சீன வீரர்கள் ராணுவ உடையின்றி சாமானியர்களைப் போன்று உடை அணிந்து வந்துள்ளனர்.  உள்ளூர் மக்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துசென்றபோது அவர்களை அனுமதிக்க சீன வீரர்கள் மறுத்துள்ளனர். இதனை தொடர்ந்து கிராம மக்கள் இந்தோ-திபெத் எல்லைப்பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். பாதுகாப்பு படையினர் வந்ததும், சாதாரண உடையில் இருப்பவர்கள் சீன ராணுவத்தினர் என்பதை அடையாளம் கண்டு கொண்டனர்.  

இதனை அடுத்து பாதுகாப்பு படையினரும், கிராமமக்களும் சேர்ந்து விரட்டியததைத் தொடர்ந்து, சீன வீரர்கள் திரும்பி செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர். சீனா வீரர்கள் இரண்டு வாகனங்களில் பொதுமக்கள் உடையணிந்து வருவதும், அவர்கள் கிராமத்திற்குள் நுழைவது குறித்த வீடியோ காட்சியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. சமீபத்தில், இந்தியாவிற்குள் எல்லைதாண்டி வந்த சீன ராணுவ வீரர் பிடிபட்டார். அவரிடம் தூங்கும் வசதி கொண்ட பை, மொபைல் போன், ராணுவ அடையாள அட்டை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் வழிதவறி வந்த காட்டெருமையை மீட்பதற்காக வந்ததாக கூறியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: