தாளவாடி மலைப்பகுதியில் பட்டியில் புகுந்து ஆடுகளை அடித்து கொன்ற சிறுத்தை: விவசாயிகள் அச்சம்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி மரியபுரம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். வனப்பகுதியில் வசிக்கும் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது இரவு நேரத்தில் வனத்தைவிட்டு வெளியேறி மலை கிராமங்களில் உள்ள விவசாய விளை நிலங்களில் புகுந்து ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை அடித்து கொல்வது தொடர்ந்து நடந்து வருகிறது.

  நேற்று காலை வனத்தை விட்டு வெளியேறிய சிறுத்தை மரியபுரம் கிராமத்தில் உள்ள அந்தோணிசாமி என்பவருக்கு சொந்தமான ஆட்டுப்பட்டியில் புகுந்து ஒரு ஆட்டை அடித்து கொன்றுவிட்டு மற்றொரு ஆட்டை இழுத்து சென்றது. காலை நேரத்தில் பட்டியில் சிறுத்தை புகுந்து செம்மறி ஆட்டை அடித்துக் கொன்றதை பார்த்த அந்தோணிசாமி அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர், சிறுத்தையின் கால் தடம் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்தனர். ஆட்டுப்பட்டியில் சிறுத்தை புகுந்து ஆடுகளை அடித்து கொன்றதால் தாளவாடி மலைப்பகுதி விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: